2011-06-09 15:43:49

எய்ட்ஸ் நோய் தீர்க்கும் செயல்களை ஒரு போர்க்கால நடவடிக்கைகளாக மேற்கொள்ள வேண்டும் - ஐ.நா.தலைமைச் செயலர்


ஜூன் 09,2011. எய்ட்ஸ் நோய் தொடர்பான செயல்பாடுகள் துவக்கத்தில் இருந்தே வெறும் நோயாக மட்டும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் சமுதாயப் புறக்கணிப்பு என்ற பெரும் பிரச்சனையையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உலகம் இருந்துள்ளது என்றும் ஐ.நா.தலைமைச் செயலர் பான் கி மூன் கூறினார்.
எய்ட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டு 30 ஆண்டுகள் முடிந்துள்ள வேளையில், ஐ.நா.தலைமைச் செயலகத்தில் இச்செவ்வாயன்று முடிவடைந்த மூன்று நாள் உயர்மட்டக் கூட்டத்தில் பேசிய பான் கி மூன் இவ்வாறு கூறினார்.
கடந்த முப்பது ஆண்டுகளில் இந்நோயினால் 6 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 2 கோடியே 50 இலட்சம் பேர் இறந்துள்ளனர் மற்றும் 1 கோடியே 60 இலட்சம் குழந்தைகள் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர் என்றும் ஐ.நா.அறிக்கை ஒன்று கூறுகிறது.
உலகின் அனைத்து நாட்டின் அரசுகள், தனியார் துறை மற்றும் பொதுநலத் துறையினர் என்று அனைவரும் இந்த நோய் தீர்க்கும் செயல்களை ஒரு போர்க்கால நடவடிக்கைகளாக மேற்கொண்டால் மட்டுமே இந்த நோயை உலகிலிருந்து முற்றிலும் நீக்க முடியும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அனைவரும் இணைந்து செயல்பட்டால் 2015 ம் ஆண்டுக்குள் இந்த நோய் கண்டோர் அனைவருக்கும் தேவையான மருத்துவ உதவிகளும் இன்னும் பிற சமுதாய உதவிகளும் கிடைக்கும் என்று ஐ.நா.அவையின் உயர்மட்ட உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர்.









All the contents on this site are copyrighted ©.