2011-06-09 15:42:17

எய்ட்ஸ் நோயைத் தீர்க்க செல்வம் மிகுந்த நாடுகளின் ஒத்துழைப்பு தேவை - திருப்பீடச் செயலர்


ஜூன் 09,2011. எய்ட்ஸ் நோயைத் தீர்க்க செல்வம் மிகுந்த நாடுகளின் ஒத்துழைப்பு தேவை என்றும், தனி மனித சுயக்கட்டுபாடே இந்த நோயைக் கட்டுப்படுத்தும் சிறந்த வழி என்றும் வத்திக்கான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எய்ட்ஸ் நோய் முதன் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டதன் 30ம் ஆண்டை பல்வேறு வகைகளில் நினைவு கூறும் இந்த வாரத்தில், எய்ட்ஸ் நோய் தொடர்பாக உரோம் நகரில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய திருப்பீடத்தின் செயலர் கர்தினால் தர்சீசியோ பெர்த்தோனே இவ்வாறு கூறினார்.
இந்த நோயை எண்ணிக்கை அளவில் மட்டும் பார்ப்பது எந்த வகையிலும் பலனளிக்காது என்று கூறிய கர்தினால் பெர்த்தோனே, இந்நோயைக் குறித்த சரியான பாடங்களை மக்களுக்கு எடுத்துச் செல்வது மிகவும் முக்கியம் என்பதை வலியுறுத்தினார்.
எய்ட்ஸ் நோயைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள antiretrovial முறைகள் குறித்த ஆய்வுகள் மனித குலத்திற்கு நம்பிக்கையைத் தந்துள்ளதென்று நலப்பணிக்கான திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski கூறினார்.
ஆணுறைகளைப் பயன்படுத்துவதால் மட்டும் எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்திவிடலாம் என்று கூறிவந்த பல பன்னாட்டு நிறுவனங்கள், திருச்சபை துவக்கத்திலிருந்தே கூறி வந்துள்ள சுயக் கட்டுப்பாடு குறித்து அண்மையில் பேசி வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கதொரு மாற்றம் என செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.