2011-06-08 16:21:45

ஊழல் ஒழிப்பு உண்ணாநோன்பு அரசியலாக்கப்பட்டதைக் குறித்து இந்தியக் கிறிஸ்தவக் குழுக்கள் கருத்து


ஜூன் 08,2011. இந்தியாவில் ஊழலை ஒழிக்கவும், கறுப்புப் பணத்தை வெளிக்கொணரவும் பாபா இராம்தேவ் மேற்கொண்ட சாகும்வரை உண்ணாநோன்பு, மற்றும் அதைத் தடுப்பதற்கு அரசு மேற்கொண்ட முயற்சிகளைக் குறித்து இந்தியக் கிறிஸ்தவக் குழுக்கள் குரல் எழுப்பியுள்ளன.
இந்த உண்ணாநோன்பு போராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த மக்கள் மீது காவல் துறையினர் காட்டிய வன்முறை ஏற்றுக் கொள்ளப்பட முடியாததொன்று என்று டில்லி உயர் மறைமாவட்டப் பேராயர் Vincent Concessao கூறினார்.
இந்தப் போராட்டம் நடைபெற்ற மேடையில் காவி உடை அணிந்தவர்களே பெரும்பான்மையாய் அமர்ந்திருந்ததைக் கண்டபோது, இந்த இயக்கம் ஒரு நாடு தழுவிய இயக்கமா அல்லது அரசியலும் மதமும் கலந்த இயக்கமா என்ற கேள்வி எழுந்ததென்று பேராயர் மேலும் கூறினார்.
இந்தியாவில் பாராளுமன்றம், நீதி மன்றம் இவைகள் வழியே மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் முறைகள் இருக்கும்போது, அரசை நிர்ப்பந்திக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த உண்ணாநோன்பு போராட்டம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று என்று இந்திய ஆயர் பேரவையின் அதிகாரப் பூர்வ பேச்சாளர் அருள்தந்தை பாபு ஜோசப் கூறினார்.
RSS மற்றும் பாரதிய ஜனதா கட்சி இந்த முயற்சிக்கு அளித்த ஆதரவு இந்த உண்ணாநோன்பை அரசியலாக்கும் முயற்சியாகவே காட்டியது என்று கூறினார் இந்திய கிறிஸ்தவ சபைகள் என்ற அமைப்பைச் சார்ந்த சாமுவேல் ஜெயக்குமார்.
இந்த முழு சம்பவத்திலும் அரசியல் அதிகம் கலந்துவிட்டதால், உண்மையான பிரச்சனைகளான ஊழல் மற்றும் கறுப்புப் பணம் ஆகியவை பின்தள்ளப்பட்டு விட்டன என்று ஜெயக்குமார் மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.