2011-06-08 16:22:03

இந்தியாவில் வரும் பாராளுமன்றக்கூட்டத்தில் மதம் சார்ந்த வன்முறைகளை அடக்கும் புதிய சட்டம் விவாதிக்கப்படும்


ஜூன் 08,2011. இந்தியாவில் ஜூலை மாதம் நடக்கவிருக்கும் பாராளுமன்றக்கூட்டத்தில் மதம் சார்ந்த வன்முறைகளை அடக்குவதற்கானச் சட்டம் விவாதிக்கப்படவிருப்பதற்கு இந்து தீவிரவாதக் குழுக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.
சிறுபான்மை இனத்தவர் மற்றும் சிறுபான்மை மதத்தவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு சட்ட வரைவு நாட்டின் ஆலோசனைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பாராளு மன்றக் கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
இந்தியாவில் இதுவரை ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் வன்முறைகள் அந்தந்த மாநிலங்களாலேயே அடக்கப்படுவதற்கு அதிகாரங்கள் உள்ளன. இந்த வன்முறைகளின் நேரத்தில் தலையிடவும், அவற்றை நிறுத்தவும் முடிவுகள் எடுக்கும் உரிமைகளை இப்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டவரைவின் மூலம் மத்திய அரசு பெறும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
சிறுபான்மையினரைக் காப்பதற்கு வழி செய்யும் இந்தச் சட்டம் விரைவில் அமுல்படுத்தப்படுவதையே அனைத்து சிறுபான்மையினரும் வரவேற்கின்றனர் என்று இந்திய ஆயர் பேரவையின் அதிகாரப் பூர்வப் பேச்சாளர் அருள்தந்தை பாபு ஜோசப் FIDES செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.
இந்தியாவின் கடந்த 50 ஆண்டு வரலாற்றைத் திருப்பிப் பார்க்கும்போது, ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்களும், குஜராத்தில் இஸ்லாமியர்களும் வரம்பு மீறிய வன்முறைகளுக்கு ஆளானதைக் காண முடிகிறதென்று கூறிய அருள்தந்தை பாபு ஜோசப், இந்தச் சட்டத்தின் மூலம் பல அரசியல் குழப்பங்களையும் தாண்டி, மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்பது சிறுபான்மையினருக்கு நம்பிக்கை தரும் ஒரு செயல்பாடு என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.