2011-06-08 16:23:40

அகதிகளை மீண்டும் மலேசியாவிற்கு அனுப்பத் தீர்மானித்த ஆஸ்திரேலிய அரசின் முடிவு சரியல்ல - தலத்திருச்சபை


ஜூன் 08,2011. ஆஸ்திரேலியாவிற்கு வந்த 800 அகதிகளை மீண்டும் மலேசியாவிற்கு அனுப்பத் தீர்மானித்துள்ள அந்நாட்டு அரசின் முடிவை ஆஸ்திரேலியத் திருச்சபை வன்மையாய் எதிர்த்துள்ளது.
இந்த முடிவினால் திருப்பி அனுப்பப்படும் அகதிகளில் பலர் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் என்றும் இவர்கள் திருப்பி அனுப்பப்படுவதால் அவர்கள் வாழ்வு ஆபத்தைச் சந்திக்கும் என்றும், சிட்னி உயர்மறைமாவட்டம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை கூறுகிறது.
மனித உரிமைகள் பலவகையிலும் பறிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டிற்கு மீண்டும் அம்மக்களை அனுப்புவது, ஐ.நா. அமைப்பு குழந்தைகள் நலனுக்காக வகுத்துள்ள பல நியதிகளுக்கும் புறம்பானது என்பதை இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
ஆஸ்திரேலிய அகதிகள் குழு, Amnesty International, இயேசு சபை அகதிகள் பணிக்குழு, மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்புக்களின் சார்பில், Marist Asylum Seekers என்ற அமைப்பின் இயக்குனர் அருள்தந்தை Jim Carty விடுத்துள்ள இந்த அறிக்கை FIDES செய்தி நிறுவனத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மக்கள் மலேசியாவுக்குத் திரும்பியதும், அவர்கள் அனைவருக்கும் சவுக்கடி முதல் கொண்டு பல்வேறு தண்டனைகள் காத்திருக்கின்றன என்று அருள்தந்தை Carty இவ்வறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.