2011-06-07 16:18:20

விவிலியத்
தேடல்


RealAudioMP3
42, 43 ஆகிய இரு திருப்பாடல்களில் நம் தேடல் தொடர்கிறது. இன்று 42ம் திருப்பாடலின் 3ம் திருவசனத்தை மட்டும் சிறிது ஆழமாகச் சிந்திப்போம்.
"இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று;
'உன் கடவுள் எங்கே?' என்று என்னிடம் தீயோர் கேட்கின்றனர்."

வேதனையில் தோய்த்தெடுக்கப்பட்ட வரிகள் இவை. துயரத்தின் உச்சியில் அல்லது துயரத்தின் ஆழ்ந்ததொரு பள்ளத்தில் இருந்து வெடித்து எழும் வார்த்தைகள் இவை. கண்ணீரே நமது உணவாகும் வேளை எது? நமக்கு நெருங்கிய ஒருவரை நாம் இழக்கும்போது, உணவருந்துவது, உறங்குவது, போன்ற அன்றாடக் கடமைகளே நமக்குக் கடினமாகிப் போகும். முழு நேரமும் கண்ணீரில் நமது இரவும் பகலும் கழியும். இறைவனை இழந்த நிலையில் திருப்பாடலின் ஆசிரியர் இந்த வரிகளைச் சொல்வதை நம்மால் ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது.

கண்ணீரே உணவாகும் இந்த உருவகத்தை வேறு திருப்பாடல்களிலும் நாம் காணலாம். இதோ சில எடுத்துக்காட்டுகள்:

பெருமூச்சினால் இளைத்துப் போனேன்: ஒவ்வோர் இரவும் கண்ணீரில் என் படுக்கை மிதக்கின்றது. என் கட்டில் அழுகையால் நனைகின்றது. துயரத்தால் என் கண் வீங்கிப்போயிற்று. திருப்பாடல் 6: 6-7

உம் மக்களின் வேண்டுதலுக்கு எதிராக எத்தனை நாள் நீர் சினம் கொண்டிருப்பீர்? கண்ணீராம் உணவை அவர்கள் உண்ணச் செய்தீர்: கண்ணீரை அவர்கள் பெருமளவு பருகச் செய்தீர். திருப்பாடல் 80: 4-5

சாம்பலை நான் உணவாகக் கொள்கின்றேன்: என் மதுக்கலவையோடு கண்ணீரைக் கலக்கின்றேன். திருப்பாடல் 102: 9

இந்த ஆழ்ந்த துயரத்திற்கு ஆசிரியர் கூறும் காரணம் என்ன? 'உன் கடவுள் எங்கே?' என்று தீயோர் அவரைக் கேட்டனர் என்பதே காரணம். நாம் சிந்தித்து வரும் இரு திருப்பாடல்களும் 'நாடு கடத்தப்பட்டோர் மன்றாட்டு' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள பாடல்கள் என்பதை அறிவோம்.

இஸ்ரயேல் மக்கள் பல ஆயிரம் ஆண்டுகள் அடிமைகளாய், நாடு கடத்தப்பட்டவர்களாய் வாழ்ந்தவர்கள். அவர்கள் வேற்று நாட்டவரிடையே வாழ்ந்தபோது, பல வழிகளிலும் உடல் வேதனைகளை அனுபவித்தனர். உடல் வேதனைகளை விட, அவர்கள் அடைந்த மன வேதனைகள் மிக அதிகம். உடல் வேதனைகள் ஒரு வேளை பகல் பொழுதோடு முடிந்திருக்கும். ஆனால், மன வேதனைகள் பகலும் இரவும் அவர்களைத் துரத்தியிருக்கும். எனவேதான் இரவும் பகலும் கண்ணீர் தன் உணவானதென்று ஆசிரியர் கூறியுள்ளார். நமக்கும் இந்த அனுபவம் உண்டல்லவா?

இஸ்ரயேல் மக்கள் அனுபவித்த மன வேதனைகளின் உச்சம் அவர்கள் ஒவ்வொரு நாளும் கேட்டு வந்த பழிச் சொற்கள், கேலிச் சொற்கள். 'உன் கடவுள் எங்கே?' என்று அவர்கள் காதுபட தினமும் ஒலித்த அந்தக் கேள்வி, அந்தக் கேலி... இடியாய் உள்ளத்தில் இறங்கியது. அதன் எதிரொலிகள் இரவும் பகலும் அவர்களை வாட்டின. இந்தக் கேள்வியை பிற நாட்டவர் கேட்டபோது திருப்பாடல் ஆசிரியரின் மனம் வேதனையுற்றது. இதேக் கேள்வியை அவரது இனத்தவரான இஸ்ரயேல் மக்களே எழுப்பியபோது அவரது வேதனை பல மடங்காகியது.

'உன் கடவுள் எங்கே?' என்பது சாதாரணமான ஒரு கேள்வி அல்ல. கடவுளின் உறைவிடம் பற்றி தத்துவம் பேச எழுந்த கேள்வி இது அல்ல. இந்தக் கேள்வியைக் கேட்பவர்கள் இறைவனைத் தேடும் நோக்கத்தில் கேட்பதில்லை. இந்தக் கேள்வியில் அதிகம் ஒலிப்பதெல்லாம் கேலி, நையாண்டி, சவால்... கடவுளைப்பற்றி எழும் கேள்வி ஒருவரது வாழ்வின் அடித்தளத்தையே அசைத்துவிடும் நிலநடுக்கம் போன்றது.

இதற்கு இணையான ஓர் எடுத்துக்காட்டை நமது அனுபவங்களிலிருந்து சொல்ல வேண்டுமெனில், இவ்வாறு சொல்லலாம். பெற்றோர் யார் என்று அறியாமல் வளரும் ஒரு குழந்தையிடம் அல்லது பெற்றோரை இழந்து தவிக்கும் ஒரு குழந்தையிடம் 'உன் அம்மா எங்கே? உன் அப்பா எங்கே?' என்று யாராவது கேட்டால், அந்தக் கேள்வி அக்குழந்தையை மிகவும் பாதிக்கும். இல்லையா? அதுபோன்ற ஓர் உணர்வை இந்த வரிகளில் வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.

கடவுள் எங்கே என்ற இந்தக் கேள்வியை இரு நிலைகளில் சிந்திக்க முயல்வோம். இந்தக் கேள்வி நமக்குள் இருந்து எழுவது ஒரு நிலை. பிறர் இந்தக் கேள்வியை நம்மிடம் கேட்பது மற்றொரு நிலை.

என் கடவுளே, நீ எங்கே இருக்கிறாய்? என்று பல முறை நாம் ஒவ்வொருவரும் மனதில் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறோம். வேதனைகளின் உச்சத்தில், தோல்வியில் துவண்டு விழும் நேரத்தில், கோபம் கொழுந்து விட்டு எரியும் நேரத்தில் இந்தக் கேள்வி நம்மிடம் இருந்து எழுந்திருக்கும். இக்கேள்விக்கு விடைகள் நேரடியாக அல்லது மறைமுகமாக நமக்குக் கிடைத்திருக்கும். அல்லது கிடைக்காமலேயே போயிருக்கும்.

கடவுள் எங்கே என்ற போராட்டத்தில் ஈடுபடும் நமக்கு Mark Twain என்ற புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளரது வாழ்க்கையின் சில பக்கங்கள் பாடமாக அமையலாம். Mark Twainன் இயற்பெயர் Samuel Clemens. Mark Twain, Olivia என்ற பெண்ணைக் காதலித்து, திருமணம் செய்தார். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர். Olivia இறை நம்பிக்கை கொண்டவர். இல்லத்தில் ஒரு பீடம் அமைத்து, தினமும் குடும்பமாய் செபிக்கும் பழக்கத்தை வற்புறுத்தி வந்தார். ஆரம்பத்தில் இச்செபங்களில் ஈடுபட்ட Mark Twain, ஒரு நாள் Oliviaவிடம், "உனக்கு இவைகளில் நம்பிக்கை இருந்தால், தொடர்ந்து செய். நான் தடுக்கமாட்டேன். ஆனால், என்னை விட்டுவிடு. எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. எனவே, உன்னுடன் செபத்தில் கலந்து கொள்வதுபோல் வெளி வேடம் போட எனக்கு விருப்பமில்லை." என்றார்.

Mark Twain புகழின் உச்சிக்குச் சென்றார். செல்வம் சேர்ந்தது. ஆனால், கடவுள் பக்தி வீட்டில் குறைந்து வந்தது. Mark Twain செபிக்காததால், Oliviaவும் கடவுளை விட்டு அதிக தூரம் சென்றார். இருவரும் கடவுளைத் தொலைத்துவிட்டனர் என்றே சொல்லலாம்.

அந்த நேரத்தில், அவர்கள் வாழ்வில் ஒரு புயல் அடித்தது. அவர்களது மூத்த மகள் Susyக்கு 14 வயது நடந்தபோது, மூளைக் காய்ச்சலால் தாக்கப்பட்டு, சாகும் தருவாயில் இருந்தார். அந்த நேரத்தில் Mark Twain தன் மனைவியிடம், "உன்னுடைய கடவுள் நம்பிக்கை இப்போது உதவிசெய்யும் என்று தோன்றினால், அந்த உதவியைத் தேடலாமே." என்று சொன்னார். அதற்கு அவரது மனைவி, "இல்லை. நான் கடவுள் நம்பிக்கையைத் தொலைத்து, பல நாட்கள் ஆகிவிட்டன. இப்போது என்னிடம் அது கொஞ்சமும் இல்லை." என்று கூறினார்.

சிறிது, சிறிதாக கடவுளை நம் வாழ்விலிருந்து தொலைத்துவிட்டு, தேவைப்படும்போது மட்டும் அவரைத் தேடினால், அவ்வளவு எளிதாக நம் கண்களுக்குப் அவர் புலப்படுவாரா என்பது தெரியவில்லை. அவர் அருகில் இருந்தாலும், அவரை எங்கே தேடுவது என்று நமக்குத் தெரியாததால், அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் திண்டாடுகிறோம்.

கடவுள் எங்கே என்ற கேள்வியை நமக்குள் நாமே எழுப்புவது முதல் நிலை. கடவுள் எங்கே என்ற கேள்வியை பிறர் நம்மிடம் கேட்பது இரண்டாவது நிலை. 'உன் கடவுள் எங்கே?' என்று தீயோர் தன்னிடம் கேட்பதாக திருப்பாடலின் ஆசிரியர் கூறியுள்ளார். கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கும்போது, அது ஒரு சவாலாக... கேலியும், நையாண்டியும் கலந்த ஒரு சவாலாக ஒலிக்கிறது. இந்த சவாலுக்குப் பின்னணியில் அவர்களது மமதை வெளிப்படுகின்றது. தங்களைச் சூழ்ந்துள்ள செல்வம், புகழ், வெற்றிகள் என்ற பல்வேறு சக்திகளால் உண்டாகும் மமதை இது. இவைகளே போதும், இவைகளை மீறி யாரும் தங்களைத் தீண்ட முடியாது என்ற இறுமாப்பில் எழும் கேள்வி இது.

இதற்கு ஓர் எடுத்துக்காட்டு இந்துமதப் பாரம்பரியத்தில் கூறப்படும் இரண்யன். எந்தெந்த வகையில் தன்னை மரணம் தீண்டக்கூடாது என்பவைகளைப் பட்டியலிட்டு, தந்திரமாக வரங்களைப் பெற்றவன் இரண்யன். தன் மகன் பிரகலாதன் நாராயணனையே என்றும் நம்பி வாழ்வதை எள்ளி நகையாடுகிறான். 'உன் நாராயணன் எங்கே?' என்று கேட்கும் இரண்யனிடம் 'அவர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்' என்று பிரகலாதன் சொன்ன பதில் நமக்கெல்லாம் தெரியும். மமதையில் தன் மகனிடம் கடவுளைப் பற்றி கேலி செய்த இரண்யனின் முடிவும் நமக்குத் தெரியும்.

'உன் கடவுள் எங்கே?' என்று சவால்கள் எழும் ஒவ்வொரு நேரமும் கடவுள் தன் சக்தியுடன் தோன்றி சவால் விட்டவர்களுக்குச் சரியான பதில்தர வேண்டும், அவர்களுக்குச் சரியானப் பாடங்கள் சொல்லித்தர வேண்டும் என்று மனம் விரும்புகிறது. இரண்யனுக்குக் கிடைத்த பதிலைப் போல் ஒவ்வொரு முறையும் நடப்பதில்லை. பல நேரங்களில் இந்தக் கேலியான, சவாலான கேள்விக்குப் பதில்களே இல்லாமல் போயிருக்கின்றன.

'என் கடவுள் எங்கே?' என்று வேதனையில் நாம் எழுப்பும் கேள்விக்கு, 'உன் கடவுள் எங்கே?' என்று மமதையில் பிறர் எழுப்பும் கேள்விக்கு, கேலிக்கு கடவுள் தரும் பதில்கள் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள நாம் கல்வாரிக்குச் செல்ல வேண்டும். இறைமகன் இயேசு அங்கு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது, தன் கடவுள் எங்கே என்ற தொனியில் அவரே கேள்விகளை எழுப்பினார். அவரைச் சுற்றி இருந்தவர்களும் கேலியாக, சவாலாக கேள்விகளை எழுப்பினர். 'நீ கடவுளாக இருந்தால் இறங்கி வா!' என்ற சவால் அது.

இயேசு எழுப்பிய கேள்விகள், அவரைச் சுற்றி எழுந்த கேள்விகள் அனைத்திற்கும் கல்வாரியில் விடைகள் கிடைத்ததாகத் தெரியவில்லை. கல்வாரிச் சம்பவங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு இறைவன் இருக்கிறாரா? இப்போது அவர் எங்கே? என்ற கேள்விகளே மனதில் பதிந்திருக்கும். விசுவாசக் கண்ணோடு பார்த்த நூற்றுவர் தலைவனுக்கும், இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட ஒரு கள்வனுக்கும் கடவுள் எங்கே என்ற கேள்விக்குச் சரியான விடைகள் கிடைத்தன. மற்றபடி, அங்கிருந்த அனைவரையும் பிரமிக்கவைக்கும் வண்ணம் விடைகள் கல்வாரியில் ஒலிக்கவில்லை. ஆனால், கல்வாரிக்குப் பின் நடந்த நிகழ்வுகளில் கடவுள் இந்தக் கேள்விக்குத் தந்த பதில்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. கடந்த 20 நூற்றாண்டுகளாய் இந்தப் பதில்கள் மனிதர்களின் ஆழ் மனதில் ஒலித்த வண்ணம் இருக்கின்றன.

கடவுள் எங்கே என்று நம் மனமும், இந்த உலகமும் எழுப்பும் கேள்விகளுக்குத் தகுந்த பதில்களை நாம் கண்டுணர்வதற்குத் தனியொரு வரம் வேண்டும், அந்த வரத்திற்காக இறைவனை இப்போது வேண்டுவோம்.








All the contents on this site are copyrighted ©.