2011-06-07 14:58:17

தடுப்பு மருந்துகளின் விலைகள் குறைய உள்ளன


ஜூன் 07, 2011. வயிற்றுப்போக்கு, நுரையீரல் பாதிப்பு, காசநோய் மற்றும் வேறு பல நோய்களுக்கான சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற உயிர்காக்கும் மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக உலக அளவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி மூலம் தடுக்கவல்ல நோய்களால் மட்டும் ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறார்கள் உலகில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் இருபத்தைந்து இலட்சம் பேர் உயிரிழந்து வரும் இன்றையச் சூழலில், குழந்தைகளுக்குத் தடுப்பு மருந்துகளைக் கொண்டு சேர்ப்பதில் உதவி வருகின்ற தடுப்பு மருந்து மற்றும் நோயெதிர்ப்பு மருந்துளுக்கான உலகக் கூட்டமைப்பான GAVI தனது இலக்குகளை எட்ட இந்த விலைக் குறைப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தைகளைத் தடுப்பூசி மூலம் காப்பாற்றுவதிலுள்ள மிகப் பெரிய தடை, அந்தத் தடுப்பு மருந்துகளின் கூடுதலான விலைகள்தான் என ஏற்கனவே பல மனிதாபிமான அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
GAVI அமைப்பின் மூலமாக விற்கப்படுகின்ற மருந்துகளின் விலைகளைக் குறைப்பதாக கிளாக்ஸோ ஸ்மித் க்லைன், மெர்க், ஜான்சன் அண்ட் ஜான்சன், சனோஃபி அவெண்டிஸ் போன்ற நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
தொண்டையடைப்பான், நரம்பிழுப்பு நோய், கக்குவான் இருமல், மஞ்சள் காமாலை, இரத்தக் காய்ச்சல் போன்ற ஐந்து நோய்களுக்கானத் தடுப்பு மருந்துகளின் விலையைக் குறைப்பதாக சீரம் இண்ஸ்டிடியூட் மற்றும் பனேஷியா பயோடெக் ஆகிய இந்திய நிறுவனங்களும் சம்மதித்துள்ளன.








All the contents on this site are copyrighted ©.