2011-06-05 14:41:50

ஜூன் 06, வாழ்ந்தவர் வழியில்...


கென்னடி என்ற பெயரைக் கேட்டதும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் 35வது அரசுத் தலைவராக ஈராண்டுகள் மட்டுமே பதவி வகித்த ஜான் F.கென்னடி நம் மனங்களில் பதிகிறார். கென்னடி குடும்பத்தில் பிறந்த இன்னும் ஒரு சிலர் அமெரிக்க அரசியல் வலராற்றில் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் மிகவும் முக்கியமானவர் இராபர்ட் F.கென்னடி (நவம்பர் 20, 1925 - ஜூன் 6, 1968).
1925ம் ஆண்டு பிறந்த இராபர்ட் கென்னடி, ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பயின்றார். 1951ம் ஆண்டு தன் அண்ணன் ஜான், சகோதரி Patricia உடன் ஏழு வாரங்கள் ஆசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். இப்பயணத்தில் இந்தியா, வியட்நாம், ஜப்பான், இஸ்ரேல் ஆகிய நாடுகளை இவர்கள் சுற்றிப் பார்த்தனர்.
1961 முதல் 1964 வரை இராபர்ட் அமெரிக்க அரசின் ஓர் உயர் பதவியான Attorney General என்ற பொறுப்பை ஏற்றார். குற்றங்கள் செய்வதை தொழிலாகத் தொடர்ந்து வந்த Mafia கும்பல்களை ஒழிப்பதில் இவர் மிகத் தீவிரமாக இறங்கினார். இவரது Attorney General பதவி காலத்தில் 800க்கும் அதிகமானோர் தண்டிக்கப்பட்டனர்.
1963ம் ஆண்டு அண்ணன் ஜான் F.கென்னடி கொலையுண்ட பின், இராபர்ட் அரசியலில் முழு மூச்சுடன் ஈடுபட்டார். கருப்பு, வெள்ளை என்ற நிற வேறுபாடு இன்றி அமெரிக்காவில் வாழும் அனைத்துக் குடிமக்களும் சமமான உரிமையுடன் வாழ வேண்டும் என்று போராடியவர் இராபர்ட்.
இராபர்ட் கென்னடி கூறியதாக பல அற்புதப் பொன்மொழிகள் உண்டு. அவற்றில் மிகவும் புகழ்பெற்ற பொன்மொழி இது:
சில மனிதர்கள் உலகை அது இருப்பதுபோலவே கண்டு, ஏன் இவ்வுலகம் இப்படி இருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகின்றனர். நானோ இதுவரை இவ்வுலகில் இல்லாதவைகளைக் கனவு கண்டு, ஏன் இவ்வுலகம் இப்படி இருக்கக்கூடாது என்ற கேள்வியை எழுப்புகிறேன்.
“Some men see things as they are and say why. I dream things that never were and say why not.”

1968ம் ஆண்டு அமெரிக்க அரசுத் தலைவர் போட்டிக்கென இராபர்ட் பல ஊர்களுக்குச் சென்று வாக்குகள் சேகரித்து வந்தார். இப்பயணங்களின் போது, ஜூன் 5ம் தேதி இரவு Los Angeles நகரில் Sirhan Sirhan என்ற 26 வயது பாலஸ்தீனிய இளைஞன் ஒருவனால் சுடப்பட்டு, அடுத்த நாள் ஜூன் 6ம் தேதி 1968ம் ஆண்டு இராபர்ட் கென்னடி உயிர் துறந்தார்.








All the contents on this site are copyrighted ©.