2011-06-05 14:42:55

குரோவேசியாவில் திருத்தந்தை வழங்கிய பாஸ்கா கால மூவேளைச் செப உரை


ஜூன் 05,2011. திருப்பலியின் இறுதியில், விண்ணக அரசியே மகிழ்வீர் என்ற பாஸ்கா கால மூவேளைச் செபத்தை குரோவேசிய மக்களுடன் திருத்தந்தை செபித்தார். இந்த செபத்திற்கு முன், அங்கு குழுமியிருந்த மக்களுக்குத் திருத்தந்தை செய்தியொன்றை வழங்கினார்.
உங்களது விசுவாசத்தில் உங்களைத் திடப்படுத்தவே நான் இங்கு வந்திருக்கிறேன். பேதுருவின் விசுவாசம், திருச்சபையின் விசுவாசம் இவைகளே நான் உங்களுக்கு இன்று வழங்கும் பரிசுகள். உங்கள் இன்பம், துன்பம் இவைகளில் தோய்ந்து உங்களிடமிருந்து வெளிப்படும் விசுவாசம், சிறப்பாக, உங்கள் குடும்பங்களிலிருந்து வெளிப்படும் விசுவாசமே நீங்கள் எனக்கு வழங்கும் பரிசாக நான் பெற்றுக் கொள்கிறேன்.
Marija Bistrica திருத்தலத்தில் வீற்றிருக்கும் அன்னை மரியாவின் அரவணைப்பில் குரோவேசியக் குடும்பங்கள் அனைத்தையும் நான் ஒப்படைக்கிறேன். இன்னும் ஓராண்டிற்குள் இத்தாலியின் மிலான் நகரில் குடும்பங்கள் சந்திக்கும் ஏழாவது அனைத்துலக நாளைக் கொண்டாட இருக்கிறோம். இந்தக் கூட்டத்தின் ஏற்பாடுகளை அன்னை மரியாவின் கண்காணிப்பில் இப்போது ஒப்படைக்கிறோம்.
நாம் கூடியிருக்கும் இதே நேரத்தில் ஸ்பெயின் நாட்டில் Juan de Palafox y Mendonza என்ற தலைசிறந்த ஆயர் அருளாளராக உயர்த்தப்படும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ள அனைத்து விசுவாசிகளுடன் நம்மையே இணைத்துக் கொள்வோம். இறைவன் Juanஐப் போன்ற புண்ணியம் மிகுந்த பலரை இவ்வுலகிற்குத் தரவேண்டும் என்று வேண்டிக் கொள்வோம்.
இவ்வாறு தன் உரையை வழங்கியத் திருத்தந்தை Serbia, Macedonia, Hungary, Albania மற்றும் Germany ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளைத் தனிப்பட்ட முறையில் வாழ்த்தினார்.









All the contents on this site are copyrighted ©.