2011-06-05 14:42:04

குரோவேசியாவில் திருத்தந்தை - இரண்டாம் நாள் திருப்பயண நிகழ்வுகள்


ஜூன் 05, 2011. குரோவேசியாவில் தன் முதல் திருப்பயணத்தை மேற்கொண்டுவரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், சனிக்கிழமைக் காலை அரசுத்தலைவரையும் பிரதமரையும் தனியாகச் சந்தித்து உரையாடிய பின்னர், தன் முதல் நாள் பயணத்தின் மாலை நிகழ்ச்சிகளை, உள்ளூர் நேரம் 5.30 மணிக்குத் துவக்கினார். முதலில் Zagrebன் திருப்பீடத் தூதரகத்தில், இத்திருப்பயண ஏற்பாட்டைக் கவனித்துவரும் அதிகாரிகளைச் சந்தித்து தன் வாழ்த்துக்களையும் நன்றியையும் வெளியிட்டார். ஏறத்தாழ 10 நிமிடங்களே இடம்பெற்ற இச்சந்திப்பிற்குப் பின், 5 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள Zagrebன் குரோவேசிய தேசிய அரங்கிற்கு திறந்த காரில் பயணமானார் பாப்பிறை. குண்டு துளைக்காத கண்ணாடி பொருத்தப்பட்ட காரில் திருத்தந்தை பயணம் செய்தபோது, சாலையின் இருமருங்கிலும் மக்கள் கூடி நின்று, குரோவேசிய மற்றும் வத்திக்கான் கொடிகளைக் கைகளில் தாங்கி, அவைகளை அசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டனர். சாலையின் இருமருங்கிலும் நின்ற மக்களை நோக்கி திருத்தந்தை கையசைத்துக் கொண்டேச் செல்ல, அந்த 5 கிலோ மீட்டர் தூரத்தையும் திருத்தந்தை கடக்க அரை மணி நேரம் எடுத்தது.
ஏறத்தாழ 700 பேர் அமரும் வசதியுடைய குரோவேசிய தேசிய அரங்கில், சமூக, அரசியல், கல்வி, கலாச்சார மற்றும் தொழிற்துறையின் பிரதிநிதிகளுடன், வெளிநாடுகளின் அரசியல் தூதுவர்களும் மதத்தலைவர்களும் திருத்தந்தையுடனானச் சந்திப்பிற்கெனக் காத்திருந்தனர்.
தேசிய அரங்கின் வாசலில் அதன் இயக்குனர் திருத்தந்தையை வரவேற்க, மேற்குப்பகுதியில் உள்ள பிரதான வாசல் வழியாக அரங்கினுள் நுழைந்தார் பாப்பிறை. துவக்க நிகழ்ச்சியாக ஓர் இசை வாசிக்கப்பட, குரோவேசிய ஆயர் பேரவையின் கலச்சார அவைக்கான தலைவர் பேராயர் Zelimir puljic அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதன்பின் Zagreb பல்கலைக்கழகத்தின் மருத்துவ நன்னெறி இயல் பேராசிரியர் Niko Zurak உரை வழங்கினார். கல்விக்கு கத்தோலிக்கத் திருச்சபை வழங்கியுள்ள ஒப்பற்ற பெரும் பங்களிப்பைக் குறித்து எடுத்துரைத்த பேராசிரியர், ஐரோப்பாவில் கல்விக்கான முதல் நிறுவனங்களை திருச்சபை உருவாக்கிய வரலாற்றை எடுத்துரைத்தார். அதன் பின் திருத்தந்தையும் தன் உரையை வழங்கினார். அதன் சுருக்கத்திற்கு இப்போது செவி மடுப்போம்.
பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை கலந்துகொண்ட இக்கூட்டம் ஏறத்தாழ ஒரு மணி நேரம் நீடித்தது. இச்சந்திப்பில் கலந்துகொண்டோருள் முக்கியமானவர்களை கூட்டத்தின் இறுதியில் தனித்தனியாகச் சந்தித்து வாழ்த்துச் சொல்லி விடைபெற்ற திருத்தந்தை, அங்கிருந்து 1.2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள யோசிப் யெலாசிச் வளாகம் நோக்கிப் பயணமானார். 50,000 இளைஞர்கள் அங்கு திருத்தந்தைக்காகக் காத்திருந்தனர். ஏறத்தாழ 30,000 இளைஞர்கள் அந்த வளாகத்தை நிறைத்திருக்க, மேலும் 20,000 இளைஞர்கள் அவ்வளாகத்தைச் சுற்றியுள்ள சாலைகளை நிறைத்து நின்றனர். இளைஞர்கள் பாடலுடன் சனிக்கிழமை மாலையை உயிர்துடிப்புடையதாக மாற்றிக்கொண்டிருக்க, அவர்களுடனான திருவிழிப்புச் செபக்கொண்டாட்டங்களுக்கென உள்ளூர் நேரம் மாலை 7.30 மணிக்கு அங்கு வந்தடைந்தார் திருத்தந்தை. அப்போது இந்திய நேரம் சனிக்கிழமை இரவு 11.00 மணி. திருத்தந்தை அங்கு வந்தடைவதற்கு முன்னரே இளைஞர் பிரதிநிதிகள் Zagreb நகரின் பாதுகாவலியான அன்னை மரியின் திரு உருவச்சிலையைத் தங்கள் கைகளில் தாங்கி வந்து, அதற்கென அமைக்கப்பட்டிருந்த தனி பீடத்தில் வைத்தனர். திருத்தந்தை அந்த வளாகத்தில் நுழையும் வேளையில் அவரை வரவேற்ற Zagreb நகரின் மேயர், நகரின் சாவியைத் திருத்தந்தையிடம் ஒப்படைத்தார். திருத்தந்தையைக் கௌரவிக்கும் ஓர் அடையாளச் சின்னமாக அது இருந்தது. இளைஞர்களுடனான திருத்தந்தையின் இந்த சந்திப்பு இரு பாகங்களைக் கொண்டதாக இருந்தது. முதலில் வார்த்தை வழிபாடும், இரண்டாவது திருநற்கருணைக்கான ஆராதனையாகவும் அது இருந்தது. திருத்தந்தை இச்சந்திப்பின்போது மேடையேறியவுடன், குரோவேசிய ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Marin Srakic திருத்தந்தையை வாழ்த்தி வரவேற்றவுடன், விவிலியத்திலிருந்து இரு வாசகங்கள் வாசிக்கப்பட, இரு இளைஞர் பிரதிநிதிகளின் சாட்சிய உரையும் இடம்பெற்றது. அதன் பின் திருத்தந்தையும் இளைஞர்களுக்கான தன் உரையை வழங்கினார். இதோ, அந்த உரையின் சுருக்கம்:
இளைஞர்களுக்கான உரை, அதைத்தொடர்ந்த விசுவாசிகள் மன்றாட்டு மற்றும் திருநற்கருணை ஆராதனை வழிபாட்டு துவக்கம் என ஒன்றரை மணி நேரம் இளைஞர்களுடன் இருந்த திருத்தந்தை, உள்ளூர் நேரம் இரவு 9 மணிக்கு அங்கிருந்து கிளம்பி 4 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள திருப்பீடத்தூதரகம் சென்றடைந்து இரவு உணவருந்தி நித்திரையிலாழ்ந்தார். இத்துடன் அவரின் குரோவேசிய நாட்டிற்கான முதல் நாள் திருப்பயண நிகழ்ச்சிகள் நிறைவுக்கு வந்தன.
குரோவேசிய நாட்டிற்கான திருத்தந்தையின் இரண்டு நாள் திருப்பயணத்தின் இறுதி நாளான ஞாயிறன்று முதல் நிகழ்ச்சியாக, குடும்பத்திற்கான தேசிய நாளையொட்டி விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றுவது இடம்பெற்றது. Zagrebன் குதிரைப்பந்தயத் திடலில் நான்கு இலட்சம் விசுவாசிகளுடன் 1000 குருக்கள் 60 ஆயர்கள் குழுமியிருக்க, கத்தோலிக்க குடும்பங்களுக்கானக் குரோவேசியத் தேசிய நாளைச் சிறப்பிக்கும் விதமாக திருப்பலி நிறைவேற்றினார் பாப்பிறை. திருப்பலியின் துவக்கத்தில் Zagreb பேராயர் கர்தினால் யோசிப் போசானிச் திருத்தந்தையை வரவேற்று உரை வழங்கினார். இத்திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரையின் சுருக்கத்திற்குத் தற்போது செவிமடுப்போம்.
குடும்பங்களுக்கானத் தேசிய நாளைச் சிறப்பிக்க தங்கள் நாட்டிற்கு வந்தமைக்காகத் திருத்தந்தைக்கு இத்திருப்பலியின் இறுதியில் தன் நன்றியைத் தெரிவித்து உரை வழங்கினார் குடும்பங்களின் மேய்ப்புப்பணிக்கான குரோவேசிய ஆயர்கள் அவையின் தலைவர் ஆயர் Valter Zupan. பின்னர், அந்த குதிரைப்பந்தயத் திடலில் குழுமியிருந்த விசுவாசிகளோடு இணைந்து மூவேளை செபத்தை செபித்தத் திருத்தந்தை, அனைவருக்கும் அல்லேலூயா வாழ்த்தொலி உரையும் வழங்கினார். அதன் சுருக்கத்திற்கு இப்போது செவிமடுப்போம்.
இத்திருப்பலிக்குப்பின் 8 கிலோ மீட்டர் காரில் பயணம் மேற்கொண்டு Zagrebன் திருப்பீடத்தூதரகம் சென்ற திருத்தந்தை அங்கே, அனைத்து ஆயர்களுடன் மதிய உணவருந்தி, அவர்களுடன் உரையாடினார்.
இத்துடன் திருத்தந்தையின் ஞாயிறு தினக் காலை நிகழ்ச்சிகள் நிறைவுக்கு வந்தன.
திருத்தந்தையின் ஞாயிறு மாலைப் பயணத்திட்டத்தில் குரோவேசியாவின் ஆயர்கள், குருக்கள், துறவிகள், குருமடமாணவர்கள் ஆகியோருடன் திருத்தந்தை மேற்கொண்ட திருவழிபாடு, மற்றும் அந்நாட்டிலிருந்து அவர் விடைபெறுதல் ஆகியவை இடம்பெற்றிருந்தன.








All the contents on this site are copyrighted ©.