2011-06-05 14:42:18

குரோவேசிய அரசு, தலத் திருச்சபை, கல்வி மற்றும் கலாச்சார மையங்களின் தலைவர்கள் ஆகியோருக்கு திருத்தந்தை வழங்கிய உரை


ஜூன் 05,2011. குரோவேசிய அரசின் பிரதிநிதிகள், தலத் திருச்சபைத் தலைவர்கள், கல்வி மற்றும் கலாச்சார மையங்களின் தலைவர்கள் ஆகிய அனைவருக்கும் தன் வணக்கத்தைக் கூறிய திருத்தந்தை, இசையால் தன்னை வரவேற்ற இசைக் குழுவினருக்குத் தன் சிறப்பான நன்றியைக் கூறிய பின் தன் உரையை ஆரம்பித்தார்.
நாடுகள் என்ற எல்லையைத் தாண்டியதொரு தன்மையைப் பெற்றிருப்பது கலை மற்றும் கலாச்சாரம். பல்வேறு மதங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் இங்கு கூடியிருப்பதைக் காணும்போது, மதம் என்பது மனித வாழ்வில் பிரித்துப் பார்க்க முடியாது இணைந்ததொரு முக்கிய அம்சம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
எனது உரையின் முக்கியக் கருத்தான மனச்சான்றைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். சமுதாய முன்னேற்றம், அரசு சார்ந்த முன்னேற்றம் அனைத்தும் மனச்சான்றின் விடுதலையை அடிப்படையாகக் கொண்டவை.
மதங்களிலிருந்து பிரிந்து, தனித்துச் செயல்படும் ஒரு கூறாக மனச்சான்றைக் காணும் ஒரு போக்கு, தற்போது மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து வருகிறது. கடவுள், மதம் இவைகளின் அடிப்படை இல்லாத மனச்சான்றை வலியுறுத்தும் ஐரோப்பிய சமுதாயங்கள், சரியான அடித்தளம் இன்றி கட்டப்படும் வீடுகள் போல் இடிந்து விழும் ஆபத்தைச் சந்திக்கின்றன.
கடவுள், மதம், மனச்சான்று ஆகியவற்றை வலியுறுத்தும் பல கல்வி, கலை மற்றும் கலாச்சார நிறுவனங்கள் குரோவேசியாவில் இருப்பது எனக்கு மகிழ்வைத் தருகிறது. உண்மையாலும், நன்மையாலும் உந்தப்பட்ட பலர் இந்த நிறுவனங்களின் பின்னணியில் உழைத்துள்ளனர். அவர்களில் இப்போது நான் எண்ணிப்பார்க்க விழைவது இந்நாட்டின் Dubrovnikல் 300 ஆண்டுகளுக்கு முன் 1711ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி பிறந்த இயேசு சபை குரு Ruder Josip Boskovic. இயற்கை சார்ந்த மெய்யியலில் ஆய்வுகளை மேற்கொண்ட அருள்தந்தை Boskovic, விசுவாசத்தையும், மனிதர்களின் இயல்பான அறிவுத்திறனையும் மிக அழகாக இணைத்தவர். உலகின் பல்வேறு அம்சங்களையும் இணைத்து, அவற்றை விசுவாசத்தின் கண்ணோட்டம் கொண்டு பார்ப்பதற்குத் தேவையான வழிகளைக் காட்டிய இயேசு சபை குரு Boskovic போன்றோருக்கு குரோவேசியா மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும்.
நமது தலைசிறந்த முன்னோர் காட்டிய வழியில், நாமும் கடவுள், மதம், மனச்சான்று இவற்றை இணைத்து, ஒரு முழுமையான வகையில் இவ்வுலகைக் காணும் வழிமுறைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு தன் உரையை வழங்கிய திருத்தந்தை அங்கிருந்தோர் அனைவருக்கும் தன் அசீரை வழங்குவதாகக் கூறி, தன் உரையை நிறைவு செய்தார்.









All the contents on this site are copyrighted ©.