2011-06-04 15:43:09

ஜுன் 05, வாழ்ந்தவர் வழியில்...


இவ்வாண்டின் துவக்கத்திலிருந்து 'வாழ்ந்தவர் வழியில்' என்ற நிகழ்ச்சி வழியாக, இவ்வுலகில் நமக்கு முன் வாழ்ந்து சென்றவர்கள் வழியில் நாம் கற்றுக்கொள்ளக் கூடிய பாடங்களைச் சிந்தித்து வருகிறோம். இன்று நாம் வாழ்ந்து சென்றவர்களைப்பற்றி எண்ணிப் பார்க்காமல், வாழ்ந்து வரும் நம்மைப் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டிய நாள் இது.
இன்று ஜூன் 5 - உலகச் சுற்றுச்சூழல் நாள் - The World Environment Day. 1972ம் ஆண்டு ஐ.நா. பொதுஅவை இந்த உலக நாளை உருவாக்கியது. வருகிற ஆண்டு 2012ல் இந்த நாளை நாம் ஆரம்பித்து 40 ஆண்டுகளை நிறைவு செய்வோம். இந்த 40 ஆண்டுகளில் சுற்றுச்சூழலைப் பற்றி நாம் பாடங்கள் எதுவும் கற்றுக் கொண்டுள்ளோமா?
சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தைப் பற்றி பல்லாயிரம் கருத்தரங்குகள், பல இலட்சம் கருத்துக் கணிப்புகள், பல கோடி பயமூட்டும் தகவல்கள் நம்மை ஒவ்வொரு நாளும் சுற்றி, சுற்றி வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் உலகச் சுற்றுச்சூழல் நாளுக்கென ஒரு மையக் கருத்தும் இந்த நாளைக் கொண்டாட ஒரு முக்கிய நகரும் தெரிவு செய்யப்படுகின்றன.
2000மாம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரும், 'சுற்றுச்சூழல் மில்லென்னியம்' என்ற தலைப்பும் தெரிவு செய்யப்பட்டன.
2009ம் ஆண்டில் மெக்சிகோ நகரில் 'உனது பூமிக்கு நீ தேவை' என்ற தலைப்பில் இந்த நாள் கொண்டாடப்பட்டது.
சென்ற ஆண்டு 2010ல் ஆப்ரிக்காவின் ருவாண்டா நகரில் 'பல உயிரினங்கள், ஒரே கோளம், ஒரே எதிர்காலம்' என்ற கருத்தில் இந்த நாள் கொண்டாடப்பட்டது.
இவ்வாண்டு 2011, ஜூன் 5ம் தேதி இந்தியத் தலைநகரம் புது டில்லி இந்த நாளுக்கெனத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் மையக் கருத்து: 'காடுகள்: உங்களுக்குப் பணி செய்யும் இயற்கை'
நமக்குப் பணிகள் செய்யும் இயற்கையை நாம் பணிவுடன் அணுகினால், மதிப்புடன் பாதுகாத்தால் நமது வருங்காலம் நம்மைப் பெருமையுடன் எண்ணிப் பார்க்கும். நமது வழியில் நடக்க நினைக்கும். முயல்வோமா?








All the contents on this site are copyrighted ©.