2011-06-04 15:52:39

குரோவேசியாவில் திருத்தந்தைக்கான வரவேற்பு நிகழ்ச்சி


ஜூன் 04, 2011. குரோவேசிய நாட்டிற்கானத் தன் முதல் திருப்பயணத்தை மேற்கொள்ளும் திருத்தந்தைக்கு முதலில் இராணுவ இசையுடன் வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர் குரோவேசியா மற்றும் வத்திக்கான் தேசிய பண்கள் இசைக்கப்பட, இராணுவ மரியாதையும் திருத்தந்தைக்கு வழங்கப்பட்டது. அங்கு குழுமியிருந்த முக்கிய அதிகாரிகள் திருத்தந்தைக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட, முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார் அரசுத்தலைவர் யோசிப்போவிச்.
நவீன ஜனநாயக நாடாக குரோவேசியா உருவாக்கப்பட்டதன் 20ம் ஆண்டு கொண்டாட்டங்கள் இடம்பெறும் இவ்வேளையில் திருத்தந்தையின் திருப்பயணம் இடம் பெறுவது நாட்டு மக்களனைவருக்கும் பெருமகிழ்ச்சி தரும் ஒன்றாக உள்ளது என்றார் அரசுத்தலைவர். 1990ம் ஆண்டுகளின் குரோவேசிய வரலாற்றில் கத்தோலிக்கத் திருச்சபை தன் ஆழமான ஆன்மீக விடுதலையின் வழி சமூகத்திற்கு ஆற்றியுள்ளப் பணிகளைச் சுட்டிக்காட்டி நன்றியையும் வாழ்த்தையும் வெளியிட்டார் அரசுத்தலைவர். நீண்ட கால கிறிஸ்தவப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ள இந்நாடு, சகிப்புத்தன்மையையும், கிறிஸ்தவ சபைகளுக்கிடையேயான உறவுகளையும், மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளையும் ஊக்குவித்து பாதுகாத்து வருவதையும் சுட்டிக் காட்டினார். ஐரோப்பிய ஐக்கிய அவையில் குரோவேசிய நாடு ஓர் அங்கமாக இணைவதற்கு திருத்தந்தை வழங்கி வரும் ஆதரவிற்கு தன் நன்றியையும் தெரிவித்தார் அரசுத்தலைவர்.
அர்சுத்தலைவரின் உரைக்குப்பின், குரோவேசிய நாட்டிற்கானத் தன் முதல் உரையை வழங்கினார் பாப்பிறை. அனைவருக்கும் தன் வாழ்த்துகளை முதலில் வெளியிட்ட திருத்தந்தை, முந்தையத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அந்நாட்டில் மேற்கொண்டுள்ள மூன்று திருப்பயணங்களை இவ்வேளையில் நினைவுக்கூர்வதாகக் கூறினார். திருப்பீடத்திற்கும் அந்நாட்டிற்கும் இடையேயான உறவு கடந்த 13 நூற்றாண்டுகளுக்கு மேலான பாதையில் சில வேளைகளில் சிரமமான, துன்பகரமான வேளைகளைக் கடந்து வந்துள்ளதையும் எடுத்துரைத்தார் பாப்பிறை. திருச்சபை மற்றும் நற்செய்தி மீது இந்நாட்டு மக்கள் கொண்டிருந்த அன்பின் சாட்சியாக இந்த வரலாறு இருந்துள்ளது. சமூக வேறுபாடுகள், அக்கறையற்ற நிலைகள், நிலையற்றத்தன்மைகள், பொறுப்புகளை ஏற்க மறுக்கும் தனிமனிதப்போக்குகளுக்கு முக்கியத்துவம், போன்றவைகளின் பாதிப்பைக்கொண்டிருக்கும் ஐரோப்பாவில் தற்போது அடிப்படை ஒழுக்க ரீதி மதிப்பீடுகளைக் கட்டியெழுப்புதல் மற்றும் சாட்சிய வாழ்வின் தேவை ஏற்பட்டுள்ளது என்றார் திருத்தந்தை. இந்நாடு சுதந்திரம் அடைந்ததன் 20ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள், மற்றும் ஐரோப்பிய ஐக்கிய அவையில் அங்கத்தினராக நுழைவு ஆகியவை இடம்பெறும் இவ்வேளையில், இந்நாட்டின் மனிதாபிமான மற்றும் கிறிஸ்தவப் பாரம்பரியம் போற்றி பாதுகாக்கப்படவேண்டும். ஐரோப்பிய சமூகம் தன் ஆன்மீக மற்றும் கலாச்சாரக் கொடைகளைக் கண்டுகொள்ள குரோவேசிய நாடு உதவட்டும். 'கிறிஸ்துவோடு ஒன்றிணைந்து' என்ற தலைப்பில் இத்திருப்பயணத்தில், குரோவேசியக் கத்தோலிக்க குடும்பங்களின் முதல் தேசிய நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வந்திருக்கும் தான், இந்நாள், குடும்ப வாழ்வின் மதிப்பீடுகளை மேலும் வளர்க்க உதவும் என்ற நம்பிக்கையையும் கொண்டிருப்பதாக உரைத்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.