2011-06-04 15:55:24

அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தை


ஜூன் 04, 2011. விமான நிலையத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்குப்பின் அரசுத்தலைவர் மாளிகை நோக்கி காரில் பயணம் மேற்கொண்டார் திருத்தந்தை. விமான நிலையத்திலிருந்து வெளியேச் செல்லும் முக்கியப் பிரமுகர்களுக்கானப் பாதை வழியே திருத்தந்தையின் கார் சென்றபோது, வாயிலின் இரு மருங்கிலும் அந்நாட்டு பாரம்பரிய உடையணிந்த சிறார்கள் நின்றுகொண்டு, திருத்தந்தையை நோக்கி கையசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டனர்.
விமான நிலையத்திலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அரசுத்தலவர் மாளிகையை திருத்தந்தை அடைந்தபோது உள்ளூர் நேரம் நண்பகல் 12 மணி 15 நிமிடங்கள்.
அரசுத்தலைவர் இவோ யோசிபோவிச் பற்றிக் கூறவேண்டுமானால், இவர் 1957ம் ஆண்டு பிறந்தவர். சட்டம் பயின்றுள்ள இவர், 1994ம் ஆண்டு முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். 2003ம் ஆண்டு பாராளுமன்ற அங்கத்தினரான இவர், 2010ம் ஆண்டு ஜனவரி 10ந்தேதி அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்ட வல்லுனராகிய இவர், இசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 50க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். எற்கனவே 2010ம் ஆண்டு அக்டோபர் 9ந்தேதி திருப்பீடத்தில் திருத்தந்தையைச் சந்தித்துள்ளார் அரசுத்தலைவர் யோசிப்போவிச்.
திருத்தந்தைக்கும் அரசுத்தலைவருக்குமிடையே அரசுத்தலைவர் மாளிகையில் இடம்பெற்றச் சந்திப்பில் நினைவுப்பரிசுகள் பரிமாறுதல், அரசு மற்றும் திருச்சபைப் பிரதிநிதிகள் அறிமுகம் செய்து வைக்கப்படல் ஆகியவைகளுடன், இரு தலைவர்களுக்கும் இடையேயான தனிச்சந்திப்புகளும் இடம்பெற்றன. இரு தலைவர்களும் தனியாகச் சந்தித்து உரையாடிய பின்னர், அரசுத்தலைவரின் மனைவியும் ஒரே மகளும் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.








All the contents on this site are copyrighted ©.