2011-06-03 15:37:57

எகிப்தில் கிறிஸ்தவக் கோவில்கள், இஸ்லாமியத் தொழுகைக்கூடங்கள் கட்டப்படுவதற்குச் சமமான விதிமுறைகள்


ஜூன் 03,2011. எகிப்தில் உள்நாட்டு முன்னேற்றத் துறை அண்மையில் உருவாகியுள்ள ஒரு சட்ட வரைவில், அந்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள் கட்டுவதற்கான விதி முறைகளை வகுத்துள்ளது.
இந்தச் சட்டவரைவு கிறிஸ்தவப் பிரதிநிதிகளின் கருத்துக்களைப் பெற அனுப்பப்பட்டுள்ளதென்றும், இதில் கூறப்பட்டுள்ளவை வரவேற்கத் தகுந்த ஒரு விடயம் என்றும் எகிப்து கத்தோலிக்கத் திருச்சபையின் சார்பில் பேசிய அருள்தந்தை Rafik Greiche கூறினார்.
தற்போதுள்ள சட்டவரைவின்படி, கிறிஸ்தவக் கோவில்கள் மற்றும் இஸ்லாமியத் தொழுகைக்கூடங்கள் இரண்டும் கட்டப்படுவதற்குச் சமமான விதிமுறைகளே வகுக்கப்பட்டிருக்கின்றன என்று கூறிய அருள்தந்தை Greiche, தற்போது சட்டவரைவாக உள்ள இந்த விதிமுறைகள் சட்டமாகும்போது என்ன மாற்றங்களைப் பெறும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்ற எச்சரிக்கையையும் விடுத்தார்.
முபாரக் ஆட்சி காலத்தில் இஸ்லாமியத் தொழுகைக்கூடங்கள் கட்டுவது மிக எளிதாகவும், கிறிஸ்தவக் கோவில்கள் எழுப்புவது மிகக் கடினமாகவும் இருந்ததைச் சுட்டிக் காட்டிய அருள்தந்தை Greiche, இப்புதியச் சட்டம் அனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்கியுள்ளது வரவேற்கத் தக்க ஒரு முயற்சி என்றார்.








All the contents on this site are copyrighted ©.