2011-06-02 13:08:22

குடிபெயர்தலால் ஏற்படும் தாக்கங்களில் மதங்களின் பங்கு குறித்து திருப்பீட அதிகாரி


ஜூன் 02,2011. குடியேறுதல் என்பது, ஐரோப்பிய சமூகத்தின் கலாச்சாரத் தனித்தன்மைக்கான அச்சுறுத்தலாக பலரால் நோக்கப்படும் நிலையானது, மதிப்புடன் கூடிய பேச்சுவார்த்தைகள் மூலமான ஏனைய கலாச்சாரங்கள் குறித்த ஆழமான புரிந்து கொள்ளுதல் மூலம் மாற்றியமைக்கப்பட முடியும் என்றார் பேராயர் அந்தோனியோ மரிய வேலியோ.
கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் யூத மதத்தவரிடையே ஹங்கேரியின் புடாபெஸ்ட்டில் இடம்பெறும் கருத்தரங்கில் உரையாற்றிய, குடியேற்றதாரர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான திருப்பீட அவையின் தலைவர் பேராயர் வேலியோ, பல்வேறு கலாச்சரங்கள் இடையேயான சந்திப்புகளில் ஒருவர் மற்றவரின் கலாச்சாரத்தை மதித்து அதில் நல்லவைகளை ஏற்று தேவையற்றவைகளை கைவிடுவதன் வழி நல்லதொரு இணக்க வாழ்வுக்கு வழிவகுக்கலாம் எனவும் கூறினார்.
கலாச்சாரப் பன்மைத்தன்மை என்பது நன்மை தரும் ஒரு கூறு என்ற மனநிலை வளரவேண்டும் என்ற அழைப்பையும் பேராயர் முன்வைத்தார்.
கலாச்சரங்கள் இடையேயான உரையாடல், மற்றும் குடியேற்றதாரர்களை வரவேற்பதில் உலகெங்கும் திருச்சபை ஆற்றி வரும் பணிகளையும் எடுத்தியம்பினார் பேராயர் வேலியோ.
ஒரு நாட்டில் அங்கு தொன்று தொட்டு வாழும் மக்களின் கலாச்சாரத்திற்கும் அங்கு குடியேறும் மக்களின் கலாச்சரத்திற்கும் இடையேயான உறவுகள் பற்றியும் எடுத்தியம்பிய பேராயர், சகிப்புத்தன்மை மற்றும் கலாச்சாரங்களிடையேயான கல்வி ஊக்குவிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.