2011-06-02 13:10:05

எல் சால்வதோரில் ஆறு இயேசு சபை குருக்கள் கொல்லப்பட்டதில் இருபது இராணுவ வீரர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு


ஜூன் 02,2011. இருபது ஆண்டுகளுக்கு முன் தென்அமெரிக்காவின் எல் சால்வதோரில் ஆறு இயேசு சபை குருக்கள் மற்றும் இரு பெண்கள் கொல்லப்பட்டதற்கு அந்நாட்டின் இரு பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் உட்பட இருபது இராணுவ வீரர்கள் குற்றவாளிகள் என்று இஸ்பானிய நீதிபதி ஒருவர் அண்மையில் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
எல் சால்வதோர் நாட்டில் சான் சாவதோர் நகரில் இயேசு சபையினரால் நடத்தப்பட்டு வந்த ஒரு பல்கலைக்கழகத்தில் 1989ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி இராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்து, அங்கு பணியாற்றிய ஆறு இயேசு சபை குருக்களையும், குருக்கள் இல்லத்தில் பணி புரிந்த ஒரு பெண்ணையும் அவரது மகளையும் சுட்டுக் கொன்றனர்.
தகுந்த காரணம் ஏதுமின்றி நடைபெற்ற இந்தப் படுகொலைகள் எல்லைமீறிய குற்றப்பழி கொண்டதால், இந்த வழக்கிற்கு உலகின் எந்த நீதி மன்றமும் தீர்ப்பு வழங்க உரிமை உள்ளதென்று அண்மையில் இந்தத் தீர்ப்பை வழங்கிய இஸ்பானிய நீதிபதி கூறினார்.
அருள்தந்தையர் Seguendo Montes, Ignacio Martin Baro, Juan Ramon Moreno, Amando Lopez, Joaquin Lopez மற்றும் Ignacio Ellacuria ஆகிய இயேசு சபைத் துறவியரும், Elba Ramos என்ற பெண்ணும் அவரது 16 வயது நிரம்பிய Celinaவும் கொல்லப்பட்டது நீதிக்கும், விசுவாசத்திற்கும் இவர்கள் தந்த சாட்சியம் என்று கருதப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.