2011-06-01 16:29:09

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


ஜூன் 1, 2011. பல நாட்களாக தொடர்ந்த வெயிலுக்குப் பின், இப்புதன் காலை சிறிது குளிர்ந்த காற்றுடன் விடிய, மழை வருமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், ஒன்பது மணிக்கெல்லாம் சூரியனின் கதிர்கள் பளிச்சென துலங்கி, 'மயங்க வேண்டாம். இன்னும் கோடைகாலத்தில் தான் இருக்கின்றோம்' என்பதை சொல்லாமல் சொல்வது போல் இருந்தது. உரோம் நகரின் தூய பேதுரு பேராலய வளாகத்தில் திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகத்தில் பங்குகொள்ள வெயிலையும் பொருட்படுத்தாமல் திருப்பயணிகளின் கூட்டம் நிரம்பியிருக்க, கிறிஸ்தவச் செபம் குறித்த தன் போதனையைத் தொடர்ந்தார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
கிறிஸ்தவச் செபம் குறித்த நம் மறைபோதகத்தின் தொடர்ச்சியாக இன்று, தலை சிறந்த இறைவாக்கினரான மோசேயைக் குறித்து நோக்குவோம். இறைவனுக்கும் இஸ்ரயேலுக்கும் இடையே நடுநிலையாளராகச் செயல்பட்ட மோசே, பரிந்துரைச் செபத்தின் எடுத்துக்காட்டாய் உள்ளார். விடுதலைப்பயண நூல் 32ம் அதிகாரம் கூறும் பொன் கன்றுக்குட்டி குறித்த நிகழ்வில் இதனைத் தெளிவாகக் காண்கிறோம். சீனாய் மலையில் இறைவனுடன் உரையாடிவிட்டு அவரிடமிருந்து சட்டத்தைக் கொடையாகப் பெற்று கீழே இறங்கி வந்த மோசே, பொன்னால் ஆன சிலையை ஆராதிக்கும் மக்களின் இறைப்பற்றுறுதியற்ற நிலைகளையும், கடவுளின் கோபத்தையும் எதிர்நோக்குகிறார். அம்மக்களுடைய பாவத்தின் தீவிரத்தை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளும் மோசே, அவர்களுக்காக இறைவனிடம் பரிந்துரைக்கிறார். இறைவன் தன் இரக்கத்தை நினைவுகூர்ந்து, அவர்களின் பாவத்தை மன்னித்து, தன் மீட்கும் வல்லமையை வெளிப்படுத்தவேண்டும் என மன்றாடுகிறார். மோசேயின் இந்தப் பரிந்துரைச் செபமானது, மக்களின் மீட்பு குறித்த இறைவனின் விருப்பம், மற்றும், 'உடன்படிக்கை'க்கு விசுவாசமாக இருக்கும் இறைவனின் நிலைப்பாடு ஆகியவைகளின் வெளிப்பாடாக இருந்தது. தன்னுடைய பரிந்துரைச் செபத்தின் வழி மோசே, இறைவனையும் அவரின் இரக்கத்தையும் குறித்த ஆழமான அறிவில் வளர்வதுடன், தன்னையே முழுமையானக் கொடையாக கையளிக்க வல்ல அன்பிற்கு தகுதியுடையவராக மாறுகிறார். இந்தச் செபத்தில் மோசே, தன்னையும் தாண்டிய முழுநிறைவான பரிந்துரையாளரான இறைமகனாம் இயேசுவைச் சுட்டிக்காட்டுகின்றார். அந்த இயேசுவே, இறைவனின் குழந்தைகளுக்கான ஒப்புரவு மற்றும் அவர்களின் பாவங்களுக்கான மன்னிப்பு ஆகியவைகளுக்கென தான் சிந்திய இரத்தத்தில், புதிய, நிலைத்த உடன்படிக்கையைத் தாங்கி வருகிறார்.
இவ்வாறு, செபம் குறித்த தன் புதன் மறைபோதகத்தொடரில் மோசேயின் பரிந்துரைச் செபம் குறித்து இவ்வாரம் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் தன் வாழ்த்துக்களை வெளியிட்டார். இப்புதன் மறைபோதகத்தில் பங்குபெற்ற இந்தியத் திருப்பயணிகளையும், குறிப்பாக மும்பை வாசியின் குரு அக்னெல்லோ மேல்நிலைப்பள்ளி மாணவர்களையும் குறிப்பிட்டு வாழ்த்தினார் திருத்தந்தை.
பின் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.







All the contents on this site are copyrighted ©.