2011-05-31 15:51:01

வெளிநாட்டு வீட்டுப்பணியாளர்களுக்காக குரலை எழுப்பியுள்ளது கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு


மே 31, 2011. பணக்கார நாடுகளில் வீட்டுவேலை செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கும் வழிமுறைகள் உருவாக்கப்படவேண்டும் என அனைத்துலக தொழிலாளர் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது சர்வதேச கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு.
ஜூன் மாதம் முதல் தேதி, இப்புதன் முதல் ஜூன் 17 வரை ஜெனிவாவில் இடம்பெற உள்ள அனைத்துலகத் தொழிலாளர் கருத்தரங்கில் இது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள காரித்தாஸ் அமைப்பு, வீட்டுப்பணியாளர்களாக வெளிநாடுகளில் வாழ்வோரின் உரிமைகளைக் காக்க வேண்டியது அனைத்துலக தொழிலாளர் அமைப்பின் கடமை என்றது.
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் உரிமைகள் மீறப்படாமல் பாதுகாப்பது, வீட்டுப் பணியாளர்களுக்கு வெளிநாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கானக் கல்வியை உறுதி செய்தல், பணியாளர்கள் சட்ட உதவியைப் பெற வழி செய்தல், போன்றவைகளுக்கான விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ளது கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பு.








All the contents on this site are copyrighted ©.