2011-05-31 16:23:03

விவிலியத்
தேடல்


RealAudioMP3
"என் உயிரின் மையம் எரிந்து கொண்டிருக்கிறது. எப்போதும் இந்த பயங்கர வேதனை தொடர்கிறது. கட்டுக்கடங்காத, புதிரான ஒரு வேதனை இது. இந்த உலகத்தைத் தாண்டிய எதோ ஒன்றை என் உயிரின் மையம் தேடுவதால் வரும் வேதனை இது. இந்தத் தேடலின் முடிவு எல்லையற்ற இறைவன் என்று பலர் சொல்கின்றனர். நான் அந்தக் இறைவனை இன்னும் கண்டுபிடிக்கவில்லை; இனியும் அவரைக் கண்டுபிடிப்பேன் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்தத் தேடல், இந்தத் தாகம் சில சமயங்களில் என்னைக் கோபத்திலும், சில சமயங்களில் என்னை விரக்தியிலும் மூழ்கச்செய்கிறது."

20ம் நூற்றாண்டில் புகழ்பெற்ற சிந்தனையாளராக, எழுத்தாளராக விளங்கிய Bertrand Russell என்பவர் தன் சுயசரிதையில் இவ்விதம் எழுதியுள்ளார். தான் கடவுள் நம்பிக்கையற்றவர் என்பதை உலகறியச் சொல்லிவந்த Russell என்ற தனி மனிதரின் மையம் அந்தக் கடவுளைத் தேடியதையும், அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் அவர் பட்ட வேதனைகளையும் இந்த வரிகள் தெளிவாக்குகின்றன.

மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வின் எதோ ஒரு கட்டத்தில் கடவுளைத் தேடியிருக்கின்றனர். என்னதான் பேரும் புகழும் அவர்களை வந்து சேர்ந்திருந்தாலும், என்னதான் செல்வங்களை அவர்கள் சேர்த்திருந்தாலும் எதோ ஒரு சமயம் அவர்கள் வாழ்வின் மையத்தில் இந்தத் தேடல் இருந்திருக்கிறது. கடவுளை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாதவர்களும் இந்த ஓர் உண்மையைத் தேடி இருக்கின்றனர். அந்த உண்மையைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல், Bertrand Russellஐப்போல் வேதனையில் வெந்திருக்கின்றனர்.

“இவ்வுலகம் மட்டுமே உண்மை; இவ்வுலக இன்பங்களே நிலையானவை” என்று தன் வாழ்வின் பெரும்பகுதியைச் செலவழித்த புனித அகுஸ்தினைப் பற்றி நாம் அறிவோம். அவர் இறைவனை மறந்து, மறுத்து வாழ்ந்தவர். அவரது தாய் புனித மோனிக்காவின் இடைவிடாத செபங்களால் மனம் மாறிய அகுஸ்தின், தன் வாழ்வின் பிற்பகுதியில் இறைவனைக் கண்டவர். இவர் தன் சுயசரிதையில் எழுதிய புகழ்பெற்ற வரிகள் இவை: "இறைவா, நீர் எம்மை உமக்காக உருவாக்கியுள்ளீர். உம்மில் நாங்கள் அமைதி காணும் வரை, எங்கள் இதயங்கள் அமைதியின்றி அலைகின்றன." (You have made us for yourself and our heart is restless until it rests in you.) ஒவ்வொரு மனிதருக்குள்ளும் எழும் இந்த ஆழ்ந்தத் தாகத்தை உணர்த்தும் 42, 43 ஆகிய இரு திருப்பாடல்களில் நம் தேடலைச் சென்ற வாரம் ஆரம்பித்தோம். இன்று தொடர்கிறோம்.

இந்தப் பாடல்களை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம் என்று குறிப்பிட்டோம். இன்று முதல் பகுதியில் நம் சிந்தனைகளைப் பகிர்வோம். இந்த முதல் பகுதியில் திருப்பாடல் ஆசிரியரின் உள்ளத்திலிருந்து ஒளிவு மறைவின்றி எழும் உணர்வுகளுக்குச் செவிமடுப்போம்.
திருப்பாடல் 42: 1-4
கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல், கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது. என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது: எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்? இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று: 'உன் கடவுள் எங்கே?' என்று என்னிடம் தீயோர் கேட்கின்றனர். மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக் கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே! ஆர்ப்பரிப்பும் நன்றிப்பாடல்களும் முழங்க விழாக்கூட்டத்தில் நடந்தேனே! இவற்றையெல்லாம் நான் நினைக்கும்போது, என் உள்ளம் வெகுவாய் வெதும்புகின்றது.

தாவீது, தன் மகன் அப்சலோமுக்குப் பயந்து, இறைவனின் நகரான எருசலேமையும், அங்கு இறைவனின் பிரசன்னம் சிறப்பாகத் தங்கியிருந்த இறைவனின் பேழையையும் இழந்து, நாட்டை விட்டு ஓடிப்போக வேண்டிய கட்டாயம் அவருக்கு. கடவுளையும், அவரது இல்லத்தையும் பிரிந்து வாழ்ந்த அந்நாட்களில் தனக்குள் உருவான தவிப்பை, ஏக்கத்தை விவரிக்க திருப்பாடலின் ஆசிரியர் பயன்படுத்தும் உருவகம்: “நீரோடைக்காக ஏங்கித் தவிக்கும் கலைமான்.”

கலை மான்களின் உடல் தோற்றம், அவை பாய்ந்து ஓடும் அழகு, தாவும் நளினம் இவை பலக் கவிஞர்களைக் கவர்ந்துள்ளன. கவிதைகள்
பிறந்துள்ளன. விவிலியத்திலும் பழைய ஏற்பாட்டில் ஆறு இடங்களில் கலைமான்கள் குறித்த உருவகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு பகுதிகளை மட்டும் இங்கு சிந்திப்போம்.

திருப்பாடல் 18: 33
அவர் என் கால்களை மான்களின் கால்களைப் போல் ஆக்குகின்றார்: உயர்ந்த இடத்தில் என்னை நிலை நிறுத்துகின்றார்.
ஆண்டவரை நம்புவோர் உறுதியாய் உயர்ந்த இடத்தில் நிமிர்ந்து நிற்க முடியும் என்பதைக் கூற, அழகாய், கம்பீரமாய் நிற்கும் மானின் உருவகம் சொல்லப்பட்டுள்ளது. மான்கள் நடந்து செல்லும்போது, நிமிர்ந்த, நேர்கொண்ட பார்வை கொண்டிருக்கும் என்பதால் மானின் உருவகம் இங்கு பொருத்தமாய்த் தெரிகிறது.

கால்களை ஊன்றி உறுதியாய் நிற்கும் திறன் கொண்டதால், மான்கள் அதிக உயரத்தை அழகாகத் தாண்டுவதற்கும் திறன் பெற்றவை. இந்த உருவகத்தை இறைவாக்கினர் எசாயாவின் நூலில் 35ம் பிரிவில் நாம் வாசிக்கின்றோம்.
இறைவாக்கினர் எசாயா 35: 1, 6
பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்: பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக் குலுங்கும்... அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்: வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்: பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்: வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும்.

மெசியாவின் வருகையால் இவ்வுலகம் முற்றிலும் மாறிவிடும் என்ற நம்பிக்கையை வளர்க்கும் வரிகள் இவை. இவ்விரு பகுதிகளிலும் கலைமான்கள் உறுதியை, நம்பிக்கையை வெளிப்படுத்தும் உருவகங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

திருப்பாடல் 42ன் துவக்கத்தில் கலைமானை வேறொரு வகையில் உருவகப்படுத்தியுள்ளார் ஆசிரியர். எண்ணியதை அடைய, தளராமல் முயலும் கலைமானை இவ்வரியில் நம் மனக்கண்முன் கொண்டு வருகிறார். தாகம் கொண்ட கலைமானிடம் பசும்புல்லையோ, பழங்களையோ தந்தால் பயனில்லை. அவற்றை அது முகர்ந்தும் பார்க்காது. அதன் கவனம் எல்லாம் தண்ணீர் மீதே இருக்கும். உலகில் வேறெந்தப் பொருளும் கலைமானுக்கு அந்த நேரத்தில் தேவையில்லை.

அதேபோல், தன் உள்ளம் இறைவனை மட்டும் தேடுகிறது என்று தாவீது இவ்வரியில் வலியுறுத்துகிறார். எருசலேமைவிட்டு வெளியேறியபின் தாவீது தன் அரண்மனை, அரியணை, குடும்பம் என்று தான் இழந்த வேறெதையும் அவர் தேடவில்லை. அவர் தேடியதெல்லாம் இறைவன் ஒருவரே.

வாழ்வில் இறைவனைச் சுவைத்தவர் தாவீது. எனவே, அவரைப் பிரிந்திருப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நாம் வாழ்வில் எவைகளுக்காகத் தாகம் கொண்டுள்ளோம், அந்தத் தாகங்களைத் தணிக்க எந்தெந்த வழிகளைத் தேடுகிறோம் என்பவைகளை ஆழ்ந்து சிந்திப்பது நல்லது.

இன்றையத் தேடலின் துவக்கத்தில் புனித அகுஸ்தின் இறைவன் மட்டில் கொண்ட தாகம் பற்றி குறிப்பிட்டோம். இத்தாகத்தைப் பற்றி புனித அகுஸ்தின் எழுதியுள்ள ஓர் அழகான செபத்துடன் இன்றைய நம் தேடலை நிறைவு செய்வோம். கண்களை மூடி இப்புனிதரோடு இணைந்து நாமும் இந்த அழகிய செபத்தை நமதாக்க முயல்வோம்...

இறைவா, நான் தாமதமாய் உம் அன்பைச் சுவைத்துள்ளேன். என்றும் பழமையாய், என்றும் புதுமையாய் விளங்கும் அழகே, இறைவா, என் வாழ்வில் இவ்வளவுத் தாமதமாய் நான் உம் அன்பைச் சுவைத்துள்ளேன்.
நீர் என்னுள் இருந்தீர். ஆனால், நான் வெளியில் அலைந்தேன். அங்கு பல இடங்களில் உம்மைத் தேடினேன். அன்புக்காக நான் அலைந்தபோது, உமது அழகியப் படைப்புக்களில் என்னையே மூழ்கடிக்க நான் முயன்றேன்.
நீர் என்னுடன் இருந்தீர், ஆனால், நான் உம்முடன் இல்லை.

தன் ஐந்து புலன்களின் வழியே இறைவன் தன்னை வந்தடைந்ததை புனித அகுஸ்தின் அழகாகக் கூறியுள்ளார் இந்த செபத்தில். நமது ஐம்புலன்களின் வழியே இறைவனும் நமது வாழ்வின் மையத்திற்கு வர வேண்டுமென்று மன்றாடுவோம்.

நீர் என்னை அழைத்தீர்; ஓங்கியதோர் குரல் எழுப்பி என்னை அழைத்தீர். அந்த அழைப்பு மூடிக் கிடந்த என் செவிகளைத் திறந்தது.
உம் ஒளியை அனுப்பினீர்; ஒளியாக நீரே வந்தீர்; என்னைச் சூழ்ந்திருந்த இருளை விரட்டி அடித்தீர்.
உமது நறுமணத்தை நான் நுகரச் செய்தீர். இப்போது நான் உமக்காக ஏங்குகிறேன்.
உம்மை நான் சுவைத்துவிட்டேன். இப்போது, உம்மை அடைவதற்குப் பசி கொண்டலைகிறேன். தாகம் கொண்டலைகிறேன்.
நீர் என்னைத் தொட்டதால், உமது அமைதிக்காக நான் எரிந்து கொண்டிருக்கிறேன்.
என்றும் பழமையாய், என்றும் புதுமையாய் விளங்கும் அழகே, இறைவா... என் வாழ்வில் இவ்வளவுத் தாமதமாய் நான் உம் அன்பைச் சுவைத்துள்ளேன்.








All the contents on this site are copyrighted ©.