2011-05-31 15:55:13

இலங்கைப் போர்க்குற்ற காட்சிகள் உண்மையே, ஐ.நா உரைக்கிறது


மே 31, 2011. இலங்கையில் போர்க் குற்றம் நடந்தது தொடர்பாக, பிரிட்டனின் "சேனல்-4' வெளியிட்ட வீடியோக் காட்சிகள் அத்தனையும் உண்மையே என, ஐ.நா., மனித உரிமைகள் விசாரணையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இத்திங்கள் துவங்கியுள்ள ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பின் 17வது அவைக்கூட்டம் மூன்று வாரங்களுக்கு இடம்பெற உள்ள நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் விசாரணையாளரும், தென்ஆப்ரிக்க சட்டப் பேராசிரியருமான கிறிஸ்டோஃப் ஹெய்ன்ஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"சேனல்-4' வெளியிட்ட வீடியோக் காட்சிகளை, தொழில்நுட்ப மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் ஆராய்ச்சிக்குட்படுத்தியதில் அவை அனைத்தும் உண்மை என்று உறுதியாகியுள்ளதாகவும், நடந்ததை நடந்தபடி அந்த வீடியோக் காட்சிகள் காட்டுகின்றன எனவும் கூறினார்.
மக்களை நிர்வாணமாக நிற்க வைத்து, இலங்கை இராணுவ வீரர்கள் சுட்டுத் தள்ளியக் கொடூரக் காட்சிகள் அடங்கிய, ஐந்து நிமிடங்கள் ஓடக் கூடிய வீடியோ குறித்துப் பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார் ஹெய்ன்ஸ்.
இலங்கை அரசு மற்றும் விடுதலைப் புலிகளின் போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா., அமைத்த மூவர் குழு, பல்வேறு அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளியிட்டுள்ளது பற்றி ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பின் கூட்டத்தின் துவக்க உரையில் குறிப்பிட்ட அதன் தலைவர் நவிநீதம் பிள்ளை, மூவர் குழு கவனத்துக்கு கொண்டு வந்துள்ள இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்து, ஐ.நா அவை கட்டாயமாக பரிசீலிக்கும் எனவும், தன் மீதானக் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசு விரைவில் நம்பத்தகுந்த பதில்களை அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.