2011-05-30 16:02:48

புதிய நற்செய்தி அறிவித்தலின் தேவையை வலியுறுத்தினார் திருத்தந்தை


மே 30,2011. நவீன கால நெருக்கடிகள், மற்றும் வாழ்க்கையிலிருந்து இறைவனை ஒதுக்கி வைக்கும் நிலைகளை எதிர்நோக்கியிருக்கும் இன்றையச் சமுதாயத்தில் மறைபோதகத் துடிப்புக்கு மீண்டும் புத்துயிர் வழங்கவேண்டிய தேவை உள்ளது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
புதிய நற்செய்தி அறிவிப்புக்கென கடந்த ஜூன் மாதம் துவக்கப்பட்ட புதியதொரு திருப்பீட அவையின் அங்கத்தினர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை, தொன்மை கலாச்சாரங்களைக் கொண்டுள்ள பாரம்பரிய கிறிஸ்தவ நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எதிர்கொள்ள இவ்வவை தன்னை தயாரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மக்களின் வாழ்விலிருந்து கடவுளை வெளியேற்ற முயல்தல், கிறிஸ்தவ விசுவாசம் குறித்த பாராமுகம், பொதுவாழ்வில் கிறிஸ்தவ விசுவாசத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்தல் போன்ற இன்றையப் போக்குகள் குறித்து கவலையை வெளியிட்ட திருத்தந்தை, புதிய நற்செய்தி அறிவித்தல் என்பது, நவீன போக்குகளுடன் சிரமமான ஓர் உறவைக்கொண்டிருக்கும் விசுவாசிகளுக்கு உதவுவதாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மறைபோதக உணர்வுகளுக்குப் புத்துயிர் வழங்குதல், மற்றும் விசுவாசிகளின் வாழ்க்கைமுறை மற்றவர்களின் நம்பகத்தன்மைக்கு உதவுவதாய் இருத்தல் என்பவைகளை தன் உரையின்போது வலியுறுத்திக் கூறினார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.