2011-05-28 14:50:02

இவ்வுலகில் படிப்பறிவில்லாத மக்களில் மூன்றில் இரு பகுதியினர் பெண்கள் - UNESCO அறிக்கை


மே 28,2011. கல்வியின் மூலமே பெண்களுக்கு தன்னம்பிக்கையைத் தர முடியும் என்றும், பெண்களின் தன்னம்பிக்கையால் இந்த உலகம் இன்னும் பெருமளவு முன்னேறும் என்றும் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான UNESCO ‘பெண்கள் கல்வியில் உலகத்தின் பங்களிப்பு’ என்ற கருத்தில் பாரிசில் இவ்வியாழன் நடத்திய ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய பான் கி மூன் இவ்வாறு கூறினார்.
UNESCOவின் அண்மைய கணக்கெடுப்பின்படி, இவ்வுலகில் படிப்பறிவில்லாத 79 கோடியே 60 இலட்சம் மக்களில் மூன்றில் இரு பகுதியினர் பெண்கள் என்றும், உலகின் அனைத்து நாடுகளிலும் மூன்றில் ஒரு பகுதி நாடுகளிலேயே கல்விக்கூடங்களில் ஆண் பெண் இருபாலரும் சமமான அளவு பயின்று வருகின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது.
பள்ளிப் படிப்பு, மற்றும் அடிப்படை எழுத்தறிவு ஆகிய இரு நிலைகளிலும் பெண்கள் இணைக்கப்பட்டால், இவ்வுலகம் இன்னும் அதிக அளவில் உற்பத்தியைப் பெருக்கும் வாய்ப்பு உள்ளதென்று ஐ.நா.தலைமைச் செயலர் சுட்டிக்காட்டினார்.
கல்வியில் மட்டும் பெண்களுக்குச் சமத்துவம் வழங்குவதோடு நில்லாமல், பல்வேறு துறைகளிலும் பெண்களுக்குச் சமத்துவம் வழங்க UNESCOவின் முயற்சிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா.செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.