2011-05-27 15:53:13

மே 28. வாழ்ந்தவர் வழியில் ....


தமிழ் மக்களிடையே ஒரு மருத்துவக் கல்லூரியைத் துவக்கிய சில ஆண்டுகளிலேயே, அதில் தமிழில்தான் பாடங்கள் இடம்பெறும் என அடம்பிடித்தார் ஒரு தமிழ்த் தொண்டர். அதற்கு மக்களிடமிருந்து எதிர்ப்பு வலுத்தது. அதற்கு அவர் கூறிய பதில் என்ன தெரியுமா?
"எதிர்காலத்திலே வைத்தியர்கள் தமது சொந்தக் கிராமங்களிலே சேவையாற்றல் வேண்டும். தமது கிராமங்களிலே வாழ்ந்து மக்கட் பணியாற்றலே நோக்கமாகும். அதற்கு இணங்க மறுப்பவர்கள், வேறு தொழிலைத் தேடிக் கொள்ளலாம். தமிழில் கற்க இணங்குபவர் மீண்டும் தமது கல்வியைத் தொடரலாம்" என்று.
இது நடந்தது 1855ல். வட இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள மானிப்பாய் எனுமிடத்தில் மருத்துவக் கல்லூரியைத் துவக்கி தமிழிலேயே பாடங்கள் நடத்தப்பட வழிவகுத்தவர் ஒரு தமிழரல்ல. மாறாக, தன்னைத் தமிழனென்று பெருமையுடன் கூறிக்கொண்ட ஓர் அமெரிக்கர். அவர் தான் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்.
அமெரிக்காவின் மாஸசெட்ஸ் மாநிலத்தின் வூஸ்டர் (Worcester) நகரில் 1822ம் ஆண்டு அக்டோபர் 10ம் நாள் பிறந்த சாமுவேல் கிறீன், தனது 18ம் வயதில் கிறிஸ்துவின் சேவைக்குத் தம்மை ஈன்றார். 1845 இல் மருத்துவரானார்.
அமெரிக்க மருத்துவரும் கிறித்தவ சமய ஊழியருமான இவர், 1847ம் ஆண்டிற்கும் 1872ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திலே, மேனாட்டு மருத்துவக்கலை யாழ்ப்பாணத்திலே தமிழிலே வளர்க்கப்படுவதற்கு அச்சாணியாக இருந்து செயற்பட்டவர். மருத்துவக் கல்வி, தமிழியற் கல்வி, நூலாக்கம், கலைச் சொல்லாக்கம் எனப் பல்வேறு முயற்சிகளில் இவர் வெற்றி கண்டார்.
மானிப்பாயில் மருத்துவ நிலையம் ஒன்றைத் தொடங்கி பணி புரியத் துவங்கினார். அங்கு தான் கிறீனின் சாதனைகள் யாவும் இடம்பெற்றன. அம்மருத்துவமனை இன்று மானிப்பாய் கிறீன் நினைவு மருத்துவமனை என அழைக்கப்படுகின்றது.
தமிழ்வழிக் கல்வி மூலம் 33 மருத்துவர்களை உருவாக்கிய பின்னரே அவர் அமெரிக்கா திரும்பினார். எனினும், அங்கிருந்தும் தமிழ் நூல்களை வெளியிடும் பணியைத் தொடர்ந்தார்.
மருத்துவர் கிறீன் அவர்கள் மொத்தம் 24 நூல்களைத் தமிழில் எழுதி வெளியிட்டார்.
தாம் இறந்தபின் ஒரு நினைவுக்கல் இருக்குமாயின் "தமிழருக்கான மருத்துவ ஊழியர்" என அதில் பொறிக்குமாறு வேண்டிக் கொண்டார். 1884 மே 28ந்தேதி மருத்துவர் கிறீன் அவர்கள் இறந்தபோது அவ்வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது. வூஸ்டர் கிராம கல்லறைத் தோட்டத்தில் அந்நினைவுக்கல் இன்றும் நிமிர்ந்து நிற்கின்றது.








All the contents on this site are copyrighted ©.