2011-05-27 15:29:21

உலகச் சுற்றுச்சூழல் நாளையொட்டி, கொரிய கத்தோலிக்க ஆயர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை


மே 27,2011. உலகில் நிகழும் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புக்களுக்கு மனிதர்களின் பேராசையே காரணம் என்று கொரியாவின் தலத்திருச்சபை கூறியுள்ளது.
வருகிற ஜூன் மாதம் 5ம் கடைபிடிக்கப்படும் உலகச் சுற்றுச் சூழல் நாளையொட்டி, கொரிய கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதிக்கான பணிக்குழுவின் தலைவர் ஆயர் Matthias Ri Iong-hoon வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், நுகர்வுக் கலாச்சாரத்தில் அதிகம் மூழ்கி வரும் மனித குலம் வளர்த்து வரும் பேராசைகளே பல்வேறு அழிவுகளுக்கு காரணமாகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான் Fukushima அணுசக்தி மையத்தில் உருவான ஆபத்துக்கள், கொரியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நான்கு நதி இணைப்புத் திட்டம் ஆகியவற்றைத் தனிப்பட்ட முறையில் சுட்டிக்காட்டும் இவ்வறிக்கை, மனிதர்களின் பேராசை மனித உயிர்கள் மீது கொண்டுள்ள மதிப்பைப் பெரிதும் பாதிக்கின்றது என்பதையும் வலியுறுத்துகிறது.
அகில உலகச் சுற்றுச் சூழல் நாளுக்கு ஒரு முன்னோடியாக இவ்வியாழனன்று கொரியாவின் Seoul நகரில் நடைபெற்ற அனைத்து கிறிஸ்தவர்கள் அமைப்பின் செபவழிபாட்டில் சுற்றுச் சூழல் மட்டில் கிறிஸ்தவர்கள் காட்ட வேண்டிய அக்கறை வலியுறுத்தப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.