2011-05-27 15:27:48

அகில உலகக் காரித்தாஸ் அமைப்பின் உறுப்பினர்களுக்குத் திருத்தந்தை வழங்கிய உரை


மே 27,2011. கடவுளின் அன்பை ஒவ்வொரு நாளும் வாழ்வில் வெளிப்படுத்துவதன் மூலமே மனிதர்களின் அடிப்படை மாண்பை இவ்வுலகில் நிலைநிறுத்த முடியும் என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கடந்த ஞாயிறு முதல் இவ்வேள்ளிவரை உரோமையில் நடைபெற்ற அகில உலகக் காரித்தாஸ் அமைப்பின் உலகப் பொதுஅவையில் கலந்து கொண்ட உறுப்பினர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இரண்டாம் உலகப் போரின் அழிவுகளிலிருந்து மனித குலத்தைக் காக்க, திருத்தந்தை 12ம் பத்திநாதரால் உருவாக்கப்பட்ட காரித்தாஸ் அமைப்பு, மனித குலத்தின் மீது திருச்சபை கொண்டுள்ள அக்கறையை உலகிற்கு வெளிப்படுத்தியது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு நாட்டிலும் பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த காரித்தாஸ் அமைப்புக்களை அருளாளர் இரண்டாம் ஜான் பால் ஒருங்கிணைத்து, அகில உலகக் காரித்தாஸ் அமைப்பை உருவாக்கியதையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, இறைவனின் அன்பை உலகிற்கு வெளிப்படுத்துவதில் இவ்வமைப்பு கொண்டுள்ள பொறுப்புக்களையும் சுட்டிக் காட்டினார்.
திருச்சபை பணிகளின் ஓர் அங்கமாக விளங்கும் காரித்தாஸ், திருச்சபையின் படிப்பினைகளுடன் தன்னை இணைத்துக் கொள்வதன் மூலம் உலகில் உள்ள மற்ற சமுதாய அமைப்புக்களிலிருந்து வேறுபட்டுள்ளது என்பதை திருத்தந்தை 16ம் பெனெடிக்ட் வலியுறுத்தினார்.
இவ்வுலகின் துயர்களைத் துடைக்கும் பணிகளில் ஈடுபடும் அகில உலகக் காரித்தாஸ் அமைப்பு, மறு உலகைக் குறித்த விசுவாசத்தை வளர்க்கும் பணியிலும் ஆர்வமாய் ஈடுபடுவதன் மூலம், இவ்வுலகில் நிலவும் பல்வேறு கருத்துக்களுக்கு மாற்று சாட்சியாகத் திகழமுடியும் என்று திருத்தந்தை தன் உரையில் தெளிவுபடுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.