2011-05-26 15:50:21

இறையடியார் Fulton Sheenஐ அருளாளராக உயர்த்தும் முயற்சிகள் வலுவடைந்துள்ளன


மே 26,2011. அமெரிக்க ஐக்கிய நாட்டில் தொலை காட்சி மற்றும் வானொலி மூலம் இறைவார்த்தையை தன் மறையுரைகளால் பரப்பி வந்த பேராயர் Fulton Sheenஐ அருளாளராக உயர்த்தும் முயற்சிகள் வலுவடைந்துள்ளன.
இம்முயற்சிகளின் ஒரு பகுதியாக, பேராயர் Fulton Sheen குறித்த விவரங்கள் அடங்கிய கோப்பு ஒன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டிடம் இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் வழங்கப்பட்டது.
1895ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த பேராயர் Sheen 1950 மற்றும் 1960களில் தொலைக்காட்சி மற்றும் வானொலியின் வழியாக பல உயர்ந்த மறையுரைகளை வழங்கி வந்தார். 1979 ம் ஆண்டு இறந்த இவரை, புனித நிலைக்கு உயர்த்தும் முயற்சிகள் 2002ம் ஆண்டு அதிகாரப் பூர்வமாகத் துவக்கப்பட்டன. பேராயர் Fulton Sheen தற்போது 'இறையடியார்' என்ற பட்டத்திற்கு உரியவர்.
பேராயர் Sheen 20ம் நூற்றாண்டின் தொடர்பு சாதனங்களைத் தன் வயப்படுத்தி, அவற்றின் வழியாக கத்தோலிக்கப் படிப்பினைகளை மிகவும் சக்தி வாய்ந்த வழிகளில் கூறியதை தான் வியந்து பாராட்டுவதாக ஆஸ்திரேலியாவின் கர்தினால் George Pell கத்தோலிக்கப் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
72 வயதான ஓர் அமெரிக்கப் பெண்மணி நுரையீரல் தொடர்பான ஓர் அறுவைச் சிகிச்சையில் இன்னும் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தபோது, அவரது கணவர் பேராயர் Fulton Sheenன் பரிந்துரையைத் தேடினார் என்றும், அதனால் அப்பெண்மணி நலமடைந்தார் என்றும் கூறப்படும் ஒரு புதுமையே இப்பேராயர் அருளாளராக உயர்த்தப்படுவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.