2011-05-24 15:05:51

விவிலியத்
தேடல்


RealAudioMP3
திருப்பாடல்கள் நூலின் இரண்டாம் பகுதியில் இன்று அடியெடுத்து வைக்கிறோம். இப்பகுதியில் 42 முதல் 72 முடிய உள்ள 31 திருப்பாடல்கள், தாவீதின் ஆட்சிகாலத்தைப் பற்றிய பாடல்கள் என்று சொல்லப்படுகின்றன.
திருப்பாடல் நூலில் மிகவும் புகழ்பெற்ற பாடல் ‘ஆண்டவர் என் ஆயன்’ என்ற திருப்பாடல் என்பதை நாம் அறிவோம். அதற்கு அடுத்தபடியாக, ஒரு சில பாடல்கள் ஓரளவு புகழ்பெற்றவை. இவைகளில் இன்றைய நம் தேடலுக்கு நாம் தெரிவு செய்திருக்கும் திருப்பாடல்கள் 42, 43 இரண்டும் அடங்கும்.
"கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பதுபோல்..." என்று ஆரம்பமாகும் 42ம் திருப்பாடல் பல வடிவங்களில் பக்திப் பாடல்களாக வெளி வந்துள்ளன.

கலை மான்கள் நீரோடைத் தேடும்
என் இதயம் இறைவனை நாடும்...

கலைமான் நீரோடையை ஆர்வமாய் நாடுதல்போல்,
இறைவா என் நெஞ்சம் மறவாது உன்னை
ஏங்கியே நாடி வருகின்றது.

ஒரே கருத்தை உள்ளடக்கிய 42 மற்றும் 43 ஆகிய இவ்விரு திருப்பாடல்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பு என் கவனத்தை முதலில் ஈர்த்தது. "நாடு கடத்தப்பட்டோர் மன்றாட்டு" என்பது அந்தத் தலைப்பு.

கடந்த சனிக்கிழமை (மே மாதம் 21ம் தேதி) விண்வெளி வீரர்களுடன் திருத்தந்தை செயற்கைக்கோள் மூலம் பேசியதைத் தொலைக் காட்சியில் நாம் பார்த்தோம். இந்த உரையாடலின் துவக்கத்தில் விண்வெளி வீரர்கள் குழுவின் தலைவனாக இருந்த Mark Kelly என்பவர் திருத்தந்தையிடம் சொன்ன வார்த்தைகள் இன்றைய உலகின் நிலையை நன்கு படம் பிடித்துக் காட்டுகிறது. "நாங்கள் வெகு தூரத்தில் உலகைச் சுற்றி பறந்து கொண்டிருக்கிறோம். இங்கிருந்து பார்க்கும்போது, நாடுகளின் எல்லைக்கோடுகள் எங்கள் கண்களுக்குத் தெரியவில்லை. ஆனால், அதே நேரம் பூமியில் வாழும் மக்களை நினைத்துப் பார்க்கிறோம். அவர்கள் இந்த எல்லைகளுக்காக எவ்வளவு தூரம் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் என்பதை நினைத்துப் பார்க்கிறோம்." என்றார்.
“We fly over most of the world and we don’t see borders, but at the same time we realize that people fight with each other and there is a lot of violence in this world,” - Cmdr. Mark Kelly

நமது அறிவியல் முன்னேற்றங்களால், தொடர்புசாதன முன்னேற்றங்களால் உலகம் மிகவும் குறுகி, உலகமே ஒரு கிராமமாக மாறி வருகிறது என்று ஒரு புறம் நாம் பெருமைப்படுகிறோம். ஆனால், அதே நேரம், நம் மனித குலம் ஒவ்வொரு நாளும் உருவாக்கி வரும் பிளவுகள், பிரிவுகளால் அண்மைய நாடுகளே அணுக முடியாத அளவு தூரமாய்ப் போவதையும் நாம் உணர்ந்து வருகிறோம். மனித குலத்தின் அறிவு ஒவ்வொரு நாளும் பரந்து விரிந்து கொண்டே இருக்கிறது. ஆனால், மனதளவில் நாம் குறுகிக் கொண்டே போகிறோம். பூமிக்கு அடுத்த பல கோளங்களில் நாம் காலடி பதித்து விட்டோம். ஆனால், அடுத்த வீட்டில் இருக்கும் அயலவரைச் சந்திக்க நம் மனதில் பயமும், தயக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 'நாடு கடத்தப்பட்டோர் மன்றாட்டு' என்ற திருப்பாடல் 42, 43 இவற்றின் தலைப்பு எனக்குள் இந்த எண்ணங்களை எல்லாம் உருவாக்குகின்றது.
நாடோடிகளாய், புலம்பெர்யர்ந்தோராய், சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாய் கோடிக்கணக்கில் மக்கள் துன்புறுவதை ஒவ்வொரு நாளும் நாம் கேட்டு வரும் வேளையில், இத்திருப்பாடல்கள் வழியாக நாமும் அவர்கள் சார்பில் நம் மன்றாட்டுக்களை எழுப்ப இவ்விவிலியத் தேடலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துவோம்.

நாடு விட்டு நாடு பயணம் செய்வதற்கும், நாடு கடத்தப்படுவதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடுகள் உள்ளன. நாடு விட்டு நாடு பயணங்கள் செய்வது நாமாகவே மேற்கொள்ளும் ஒரு முயற்சி. பொதுவாக இது ஆனந்த எதிர்பார்ப்புக்களை உருவாக்கும் ஒரு செயல். ஆனால், நாடு கடத்தப்படுவது நம்மீது திணிக்கப்படும் ஒரு கட்டாயம். இது வேதனைகளில் நம்மை மூழ்க வைக்கும். இயற்கைப் பேரிடர், அரசியல், பொருளாதாரச் சிக்கல்கள், மதம், இனம், மொழி இவைகளால் எழும் வன்முறைகள் என்று பல காரணங்களால் கோடான கோடி மக்கள், பெரும்பாலும் ஏழை மக்கள், ஒவ்வொரு நாளும் நாடு கடத்தப்படுகின்றனர்.
தாங்கள் வாழ்ந்த இடத்திலிருந்து முற்றிலும் வேரோடு வெட்டப்பட்டு, வேறு இடத்திற்கு விரட்டப்பட்டுள்ள இந்த மக்களுக்கு வாழ்வின் மீது சிறு இழை போன்ற பிடிப்பை ஏற்படுத்துவது கடவுள் நம்பிக்கை மட்டுமே. இந்தக் கடவுள் மீது கோபம் இருந்தாலும், அந்த ஒரு நம்பிக்கை மட்டுமே இவர்களை இந்த உலகில் வாழ வைத்துள்ளது. இத்தகைய கோபம், தாபம், துயரம், அதே வேளையில் நம்பிக்கை என்று பல உணர்வுகளை இவ்விருத் திருப்பாடல்களும் நமக்கு வழங்குகின்றன.

இந்தப் பாடல்களைத் தாவீது எழுதினார் என்பது விவிலிய ஆய்வாளர்களின் கருத்து. தாவீதும் நாடு கடத்தப்பட்ட நிலையை உணர்ந்தவர். சவுல் அரசனிடம் இருந்து தன் உயிரைக் காத்துக் கொள்ள, நாட்டை விட்டு ஓடி, எதிரியான காத் நாட்டு மன்னர் ஆக்கிசிடம் சென்றார். அங்கும் ஒரு பைத்தியக்காரன் போல் நடித்து, அங்கிருந்து தப்பினார் என்று 1 சாமுவேல் 21: 10-15 நூலில் வாசிக்கிறோம்.
இரண்டாம் முறையாக தாவீது தன் மகன் அப்சலோமிடமிருந்து தப்பி ஓடுகிறார். இம்முறை அவர் இறைவனின் நகரான எருசலேமிலிருந்து வெளியேறுகிறார். அப்படி அவர் செல்லும்போது, அவருடன் சென்றவர்கள் உடன்படிக்கைப் பேழையையும் சுமந்து சென்றார்கள். ஆனால், தாவீது அந்தப் பேழையை மீண்டும் இறைவனின் நகருக்குள் அனுப்பி வைக்கிறார். தன் துயரங்களின் உச்சத்தில் அவருக்கு இருந்த ஒரே துணையான இறைவனின் பிரசன்னத்தையும் அவர் இழக்க வேண்டியிருந்தது. இந்த நிகழ்வை 2 சாமுவேல் நூலில் வாசிக்கிறோம்.

2 சாமுவேல் 15: 23-26
மக்கள் யாவரும் கடந்து சென்றதைக் கண்டு, நாடு முழுவதும் புலம்பிற்று, அரசர் கிதரோன் அருவியைக் கடந்தார். மக்கள் அனைவரும் பாலை நிலத்தை நோக்கிச் சென்றனர். இதோ! சாதோக்கும் அவரோடு லேவியர் அனைவரும் கடவுளின் பேழையைச் சுமந்து கொண்டு வந்தனர். மக்கள் அனைவரும் நகரைக் கடக்கும் வரை கீழே வைத்திருந்தனர். அபியாத்தார் அங்கே வந்தார். அரசர் சாதோக்கை நோக்கி, “கடவுளின் பேழையை நகருக்குத் திருப்பி எடுத்துச் செல். ஆண்டவரின் பார்வையில் எனக்கு கருணைக் கிடைத்தால், அவர் என்னைத் திருப்பிக் கொணர்ந்து அதனையும் அதன் உறைவிடத்தையும் நான் காணச் செய்வார்.உன் மீது எனக்கு விருப்பமில்லை என்று அவர் கூறினால், இதோ நான் இருக்கிறேன்! அவர் விருப்படியே எனக்கு செய்யட்டும் என்று கூறினார்.

உடன்படிக்கையின் பேழையில் இறைவனின் பிரசன்னம் தங்கியிருந்ததாக தாவீதும், இஸ்ரயேல் மக்களும் நம்பி வந்த காலம் அது. அந்த உடன்படிக்கைப் பேழை இறைவனின் நகர் என்று அழைக்கப்படும் எருசலேமில் இருப்பதே பொருத்தம் என்று தாவீது அப்பேழையை மீண்டும் நகருக்குக் கொண்டு செல்ல கட்டளையிட்டார். தன்னைக் கொல்லத் துடிக்கும் மகனை விட்டுப் பிரியும் வேதனையை விட, இறைவனின் பிரசன்னத்தில் இருந்து தன்னைப் பிரித்துக் கொண்ட வேதனை தாவீதை ஆழமாகப் பாதித்திருக்க வேண்டும். அந்த வேதனையின் வெளிப்பாடுதான் இவ்விரு திருப்பாடல்கள்.
இவ்விருத் திருப்பாடல்களையும் இணைத்து ஒரே பாடலாக நாம் கருதினால், இங்கு மூன்று பகுதிகள் இருப்பதைக் காணலாம் - திருப்பாடல் 42: 1-4 முதல் பகுதி; 42: 6-10 இரண்டாம் பகுதி; திருப்பாடல் 43: 1-4 மூன்றாம் பகுதி. தளர்ந்து, நொறுங்கிப் போன ஒரு மனதிலிருந்து எழும் துயரமான எண்ணங்கள், இறைவனின் பிரசன்னத்தை, கோவிலைத் தேடிச் சென்ற அனுபவங்கள், உடைந்து போன உள்ளத்தில் உருவாகும் நம்பிக்கை என்ற பல எண்ணங்கள், உணர்வுகள் இவ்விரு திருப்பாடல்களில் ஒலிக்கின்றன. இவைகளை நாம் அடுத்த வாரம் இன்னும் ஆழமாகச் சிந்திப்போம். இந்த மூன்று பகுதிகளின் இறுதியில் பல்லவியைப் போல் ஒரு பகுதி மும்முறை ஒலிக்கிறது. இப்பகுதி தாவீது கொண்டிருந்த இறை நம்பிக்கையை வெளிப்படுத்தும் பகுதி. இந்த வரிகளுடன் நமது இன்றையத் தேடலை நிறைவு செய்வோம்.

திருப்பாடல் 42: 5, 11; 43: 5
என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்? நீ கலக்கமுறுவது ஏன்? கடவுளையே நம்பியிரு: என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்.








All the contents on this site are copyrighted ©.