2011-05-24 15:05:25

மே 25, வாழ்ந்தவர் வழியில்...


"நான் இங்கிலாந்தில் Wearmouth என்ற பகுதியில் பிறந்தவன். எனக்கு 7 வயதானபோது, தவமுனிவர் பெனடிக்ட்டின் கண்காணிப்பில், அவரது துறவு மடத்தில் சேர்க்கப்பட்டேன். அன்று முதல் விவிலியத்தைப் படிப்பதில் என் வாழ்வு முழுவதையும் செலவிட்டேன். 19வது வயதில் தியாக்கோனாகவும், 30வது வயதில் குருவாகவும் நான் திருநிலைப்படுத்தப்பட்டேன்."
இவ்வாறு தன் வாழ்க்கைக் குறிப்புகளை எழுதியவர் வணக்கத்துக்குரிய பீட் (Venerable Bede) என்று வழங்கப்படும் ஒரு புனிதர். இவர் 673ம் ஆண்டில் பிறந்தவர். தன் வாழ்வின் பெரும்பகுதியைத் துறவு மடத்தில் செலவிட்ட இவர், விவிலிய விளக்கங்களையும், திருச்சபையின் முதுபெரும் தலைவர்களின் எண்ணங்களையும் புத்தகங்களாக வடித்தவர். துறவு மடத்தின் தலைமைத் துறவியாக இவர் தெரிவு செய்யப்பட்டபோதும், அப்பொறுப்பை ஏற்க மறுத்து, எழுதுவதிலேயே தன் வாழ்வைச் செலவிட்டார். இறையியல், விவிலியம், அறிவியல், வரலாறு என்று பலத் துறைகளில் 45 நூல்களை இவர் எழுதியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இவர் மரணப்படுக்கையில் இருந்தபோதும், தன் எண்ணங்களை வாய்மொழியாகச் சொல்ல, வேறொருவர் அவைகளைப் பதிவு செய்தார் என்றும் சொல்லப்படுகிறது.
735ம் ஆண்டு மே மாதம் 25 அல்லது 26ம் தேதி, கிறிஸ்துவின் விண்ணேற்றப் பெருவிழாவன்று இவர் இறையடி சேர்ந்தார். 1899ம் ஆண்டு திருத்தந்தை 13ம் லியோ இவரைப் புனிதராகவும், திருச்சபையின் மறைவல்லுனராகவும் அறிவித்தார். இப்புனிதரின் திருவிழா மேமாதம் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.