2011-05-24 14:11:18

மியான்மார் நாட்டில் மனித உரிமைகளுக்கானப் பாதுகாப்பு இல்லை என்கிறார் ஐ.நா. அதிகாரி


மே 24, 2011. மியான்மார் நாட்டில் மக்களாட்சியை நோக்கிய பாதை வெகு காலதாமதமாகவே இடம்பெறுவதாகவும், மனித உரிமைகளுக்கானப் பாதுகாப்பு அங்கு இல்லை எனவும் குறை கூறியுள்ளார் ஐ.நா.வின் சிறப்பு அதிகாரியும் மனித உரிமை வழக்குரைஞருமான Tomas Ojea Quintana.
குடியாட்சியை நோக்கிய பாதையில் மியான்மார் அரசின் முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. சார்பில் அண்மையில் ஆய்வு நடத்திய இவர், சிறுபான்மை சமுதாயத்தினர் வாழும் பகுதிகளில் வன்முறைகள் தொடர்வதாகவும், அரசின் திட்டமிட்ட இராணுவ நடவடிக்கைகளால் மனித உரிமை மீறல்கள் பெருகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மக்களின் நிலங்களை ஆக்ரமித்தல், கட்டாயப் பணியில் மக்களை ஈடுபடுத்துதல், வலுக்கட்டாயமாக வேறு இடங்களில் குடியமர்த்துதல், மற்றும் பாலின அத்துமீறல் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அவை குறித்து அரசு எவ்வித கவலையும் இன்றி செயல்படுவதாகவும் அறிவித்தார் குவின்டானா.
உலகிலேயே மனித உரிமை மீறல்களில் நேரடியாக ஈடுபட்டுள்ள ஒரே நாடு மியான்மார் தான் எனவும் அவரின் அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.
உரிமைகளின் பாதுகாப்பிற்கான உறுதிமொழிகள் வழங்கப்பட வேண்டும், மற்றும் மக்களுக்கான திட்டங்களில் அவர்களின் கருத்துக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் எனவும் குவின்டானா கேட்டுக்கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.