2011-05-23 16:51:13

வாரம் ஓர் அலசல் – “நான் பசியாய் இருந்தேன், உணவு கொடுத்தீர்கள்”


மே23,2011. “பெற்ற குழந்தையை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்ற பெண் பணத் தகராறில் காவல்துறையில் சிக்கியதால் அம்பலம்”. இப்படியொரு செய்தியை கடந்த மார்ச், பத்தாம் தேதி செய்தித் தாளில் வாசிக்க நேர்ந்தது. திருவனந்தபுரம் மேலஆரனூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் பஷீர், ஜமீலாபீவி தம்பதியருக்கு குழந்தை இல்லை. எனவே இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் மூலம் ஓர் ஆண்குழந்தையை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த இந்து என்ற பெண் வறுமை காரணமாக இந்தக் குழந்தையை விற்பனை செய்துள்ளார். ஆனால் விலைபேசியபடி ஐம்பதாயிரம் ரூபாய் இந்துவுக்குக் கிடைக்கவில்லை. இதனால் தனது குழந்தையைத் தேடி அலைந்த இந்து, திருவனந்தபுரம் இரயில் நிலையத்தில் அந்தத் தம்பதியரைக் கண்டுபிடித்தாள். இவர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதத்தில் இந்தச் செய்தி அம்பலமாகியிருக்கிறது.
ஆந்திர மாநிலம், கடப்பாவில் ஒரு தந்தை தனது ஏழு வயது மகளைக் கூவிக் கூவி விற்ற கொடுமை நடந்திருக்கிறது. குடிப்பழக்கம் கொண்ட அவர் முதலில் 300 ரூபாய்க்கு ஏலத்தைத் தொடங்கியிருக்கிறார். “புள்ளை வேணுமா?, புள்ளை வேணுமா?” என்று அவர் கூவியதைப் பார்த்து ஒருவர் ஆயிரம் ரூபாய்க்கு வாங்க முன்வந்திருக்கிறார். ஆனால் அந்தச் சிறுமி அந்த ஆளுடன் செல்ல மறுத்ததால் கோபமடைந்த தந்தை அவளைத் தர தரவென இழுத்துச் சென்றிருக்கிறார். ஆந்திராவில் ஒரு சில மாவட்டங்களில் குழந்தையை விற்கும் கொடுமை அண்மைக் காலமாக அதிகரித்திருக்கிறது. மலையோர மக்கள் தங்கள் வறுமையைப் போக்குவதற்கு இப்படி முடிவெடுக்கிறார்கள் என்று இச்செய்தியைப் பிரசுரித்திருந்த தினத்தாள் குறிப்பிட்டிருந்தது.
வறுமையும் பசியும் எந்த அளவுக்குப் பெற்றோரை இட்டுச் செல்கின்றது என்பதற்கு இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ஒரு சான்று. உலகம் இதுவரை இரண்டு உலகப் போர்களைச் சந்தித்துள்ளது. நாடுகள் தங்களது அதிகாரப் பலத்தை உறுதிப்படுத்தவும் நிலத்திற்காகவும் இச்சண்டைகள் நடைபெற்றன. ஆனால் 1945ல் இரண்டாவது உலகப் போர் முடிவடைந்த பின்னர் எந்த நாடும் பெரிய அளவில் போருக்குத் தயாராகவில்லை. ஆனால் மூன்றாவதாக ஓர் உலகப் போர் வந்தால் அது தண்ணீருக்காக வரும் என்று பரவலாகப் பேசப்படுகின்றது. ஆனால் அப்போர் உணவுக்காக நடைபெறும் என்று அண்மையில் வரலாற்று ஆசிரியர்களும் நிபுணர்களும் எச்சரித்துள்ளனர். நார்மென் போர்லாக் என்பவரும் சொன்னார் – “நீங்கள் அமைதியை, நீதியைக் கட்டி எழுப்ப விரும்புகிறீர்களா அதிக உணவை உற்பத்தி செய்யும் அதிகமான நிலங்களை உருவாக்குங்கள்” என்று.
ஆனால் இன்று போட்டிப் போட்டுக் கொண்டு முன்னேறும் நாடுகள் தங்களது முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு கைவைக்கும் முதல் இடம் விவசாய நிலங்கள். நாட்டின் வளர்ச்சிக்காக வேளாண் நிலங்களையும் இயற்கையையும் அழித்து வருகின்றன. இதனால் பயிர் செய்யும் நிலங்களின் அளவும் உற்பத்தியும் குறைந்து வருகின்றன. ஒருவேளை நவீன முறைகளைப் பயன்படுத்தி உணவு உற்பத்தியைப் பெருகச் செய்யலாம். ஆனால் இயற்கைக்கு ஈடு கொடுக்க முடியாத நிலை ஏற்படும். கழுத்து நிறையத் தங்கம் இருக்கலாம், ஆனால் ஒருவேளை வயிறு நிறைய அரிசி இருக்காது. எரிபொருள் மிகுந்த அரபு நாடுகள் 90 விழுக்காட்டுக்கு அதிகமான உணவுப் பொருட்களை வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்கின்றன. வளர்ந்த நாடுகள் பிற நாடுகளில் நிலங்களை வாங்கிப் பயன்படுத்துவதால் மீண்டும் காலனி ஆதிக்கம் உருவாகும் என ஒரு வரலாற்று ஆசிரியர் எச்சரித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த “ஆம்வே” என்ற நிறுவனம் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பல ஆண்டுகளுக்கு நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ளது. இங்கு அந்நிறுவனம் பயிர் செய்து அதிலிருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சோப்பு, அழகுசாதனப் பசை, பற்பசை மற்றும் பிற வாசனைப் பொருட்களைத் தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. சவுதி அரேபியாவில் விவசாய நிலங்கள் இல்லாததால் அந்நாடு, ஆப்ரிக்காவின் கென்யாவில் பல இலட்சம் ஹெக்டேர் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ளது. இதேபோல் பல அரபு நாடுகள் வெளிநாடுகளில் நிலங்களைக் குத்தகைக்கு வாங்கி வேளாண்மை செய்கின்றன. கடந்த ஏப்ரலில் தென்கொரியாவின் Daewoo நிறுவனம், ஆப்ரிக்காவின் மடகாஸ்கர் தீவில் 32 இலட்சம் ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. அங்கு ஆண்டுக்கு 50 இலட்சம் மெட்ரிக் டன் மக்காச்சோளமும் ஐந்து இலட்சம் டன் palm oil லும் பயிர் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இதில் கிடைக்கும் தாவர எரிபொருட்களை தென்கொரியாவில் சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்குப் பயன்படுத்துவது அதன் திட்டமாகும் என ஊடகங்கள் கூறுகின்றன.
எய்ட்ஸ் நோய், மலேரியா, ஷயரோகம் ஆகியவற்றைவிட, பசியும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையும்தான் இன்றைய உலகிற்குப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன என்று WFP என்ற ஐ.நா.வின் உலக உணவு திட்ட அமைப்பு கணித்துள்ளது. உலகில் சுமார் 92 கோடியே 50 இலட்சம் பேர் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையுடன் வாழ்பவர்கள். அதாவது உலகில், ஏழு பேருக்கு ஒருவர் வீதம், நலமாக இருந்து தரமான வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான உணவு கிடைக்காமல் இருக்கின்றனர். இயற்கைப் பேரிடர்கள், வறுமை, வசதி குறைந்த வேளாண் உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழலை மிதமிஞ்சி சுரண்டுதல் ஆகியவை, மக்கள் எதிர்நோக்கும் பசிக்கு முக்கிய காரணங்கள். அத்துடன் நிதியும் பொருளாதார நெருக்கடியும் தற்சமயம் இணைந்துள்ளன. இந்தப் பசிக்கொடுமையானது தனிப்பட்ட ஆட்களை மட்டுமல்லாமல் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை நசுக்கும் சுமையாகவும் இருக்கின்றது. பசி மற்றும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் உடல் நலமும் மனநலமும் பாதிக்கப்படும் ஒவ்வொரு குழந்தையும் தனது வாழ்நாளில் 5 முதல் 10 விழுக்காடு ஊதியத்தை இழக்கின்றது என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர். இந்த 21ம் நூற்றாண்டில் உலகின் பசிக் கொடுமையை பாதியாகக் குறைப்பது என்று ஐ.நா.நிறுவனம் தனது மில்லென்யத் திட்டத்தை வகுத்தது. 1980களிலும் 1990களின் முதல் பாதிப் பகுதியிலும் இந்தப் பசியைக் குறைப்பதில் முன்னேற்றம் இருந்தது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் உலகில் பசியாய் இருப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. FAO என்ற ஐ.நா வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் இந்த 2011ம் ஆண்டில் வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி, 2008ம் ஆண்டில் குறைந்த வருவாய் மற்றும் உணவுப் பற்றாக்குறையை எதிர் நோக்கிய 177 நாடுகளில் 170வது இடத்தில் Chad என்ற ஆப்ரிக்க நாடு இருக்கின்றது. காங்கோ குடியரசு அதிகமான இளையோரையும் அதிகமான நகர வாசிகளையும் கொண்டிருக்கும் நாடு. இந்நாட்டில் வாழும் ஏறக்குறைய 37 இலட்சம் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இருபது வயதுக்கும் குறைவானவர்கள். வடகொரிய கம்யூனிச நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஒரு தொடர் கதையாகவே இருந்து வருகிறது.
ஓராண்டில் மூன்று கோடிப் பேர் பசியால் இறக்கின்றனர். ஒவ்வொரு 3.6 வினாடிகளுக்கு ஒருவர் பசியால் இறக்கின்றார். இவர்களில் 75 விழுக்காட்டினர் சிறார். கடந்த ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒரு கோடியே எழுபது இலட்சம் சிறார் பசியோடு வாழ்ந்தனர். அண்மை மாதங்களில் லிபியாவின் எல்லைப்புறங்களில், ஐவரி கோஸ்ட் நாட்டில், டுனிசியா எகிப்து போன்ற நாடுகளிலிருந்து வெளியேறிய அகதிகள் என ஆயிரக்கணக்கில் மக்கள் பசியால் வாடுகின்றனர். அருளாளர் திருத்தந்தை 23ம் அருளப்பர் 1960ம் ஆண்டு மே 3ம் தேதி சொன்னார் : “மக்கள் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை எதிர் நோக்குவதற்கு நாம் அனைவருமே பொறுப்பேற்க வேண்டும்” என்று.
“பசி் வந்தால் பத்தும் பறந்து போம்” என்றதொரு பழமொழி உள்ளது. நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் நடித்த படங்களைப் பார்க்கும் போது அதில் எப்படியாவது சாப்பிடும் காட்சி ஒன்று இருக்கும். அதில் அவர் சாப்பாட்டைத் திருடிச் சாப்பிட முயற்சிப்பார் அல்லது யாராவது சாப்பாட்டைத் தட்டிப் பறித்து விடுவார்களோ என்ற பயத்தில் அவசர அவசரமாகச் சாப்பிடுவார். அதைப் பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். ஆனால் சார்லி சாப்ளின் சொன்னார் : “தன்னை இயக்கிக் கொண்டு இருக்கும் ஒரே சக்தி பசிதான்” என்று.
இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயம். இரஷ்யப் படை ஜெர்மன் எல்லைக்குள் நுழைந்தது. இரஷ்ய படைவீரர் ஒருவருக்கு கால் உடைந்து விட்டது. அதனால் அவரது படைப்பிரிவு அவரைத் தனியே விட்டுவிட்டு முன்னேறியது. அந்தப் படை வீரரால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. பசியும் வாட்டியது. கையில் இருந்த துப்பாக்கியை ஊன்றிக் கொண்டே ஏதாவது சாப்பாடு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் நான்கு நாட்கள் நடந்தார். ஓர் இரவில் ஒரு வீடு தென்பட்டது. அது ஒரு ஜெர்மானியப் பெண்ணின் வீடு. அந்த வீட்டை மெதுவாக நெருங்கி, கையிலிருந்த துப்பாக்கியை வைத்து மிரட்டி உணவு கேட்டார். தன்னிடம் உணவு எதுவும் இல்லை என்றார் அப்பெண். ஏதாவது சாப்பிடத் தா, இல்லாவிட்டால் உன்னைக் கொன்று விடுவேன் என்று கர்ச்சித்தார் படைவீரர். அவ்வளவு பசி அவருக்கு. உடனே அந்தப் பெண் தன்னிடமிருந்த தானியத்தைக் கொண்டு கஞ்சி சமைத்துக் கொடுத்தார். அந்தக் கஞ்சியைக் கண்டதும் அந்த படைவீரர் வாய்விட்டு ஓவென கதறி அழுதார். அவரால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த ஜெர்மானியப் பெண் அந்த இரஷ்ய வீரரைத் தனது மடியில் கிடத்தி உணவு ஊட்டினார். அதைச் சாப்பிட்டு முடிந்ததும் கையில் வைத்திருந்த துப்பாக்கியை வீசி எறிந்துவிட்டு அப்பெண்ணின் கால்களை இறுகப் பற்றிக் கொண்டு படைவீரர் சொன்னார் : “நான் பசியோடு அலைந்த போது கடவுள் என்ற ஒருவர் உலகில் இல்லை என்று ஆத்திரமாகக் கத்தினேன். ஆனால் இப்போது கடவுள் இருப்பதை உணர்கிறேன். எனக்கு நீதான் கடவுள்” என்று.
அன்பர்களே, பசியின் முன்னால் பகைவர்கள் இல்லை. பசி வந்து விட்டால், மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் எனப் பத்தும் பறந்து போகும். இதைச் சொல்லத்தான் "பசி வந்திடப் பத்தும் பறக்கும்" என்றார்கள். இந்த நல்வழி பாடல் பழங்காலத்திற்கு மட்டுமல்ல இக்காலத்திற்கும் பொருந்துவதாகவே இருக்கின்றது. பசி மிகவும் கொடுமையானது. பசி வந்துவிட்டால் அதன் முன் எதுவும் நிற்க முடியாது. எவ்வளவு பெரிய அறிவையும் ஆற்றலையும் வீரத்தையும் ஏன், தவத்தையும் கூட பசி ஒரே நொடியில் வென்றுவிடும்.
“நான் பசியாய் இருந்தேன், உண்ணக் கொடுத்தீர்கள்” என்று அந்த இறுதித் தீர்ப்பின் போது நல்லவர்களைப் பார்த்து இயேசு சொல்லும் அருள்சொற்களைச் சிந்திப்போம்.








All the contents on this site are copyrighted ©.