2011-05-23 16:48:49

மே 24 வாழ்ந்தவர் வழியில்....


நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் போலந்தின் Thorn எனும் ஊரில் 1473ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி பிறந்தார். இவரது தந்தை ஒரு பணக்கார வியாபாரி. சிறுவயதில் தந்தையையும் தாயையும் இழந்த இவர், கத்தோலிக்க ஆயரான இவரது தாய்மாமனாரால் வளர்க்கப்பட்டார். போலந்தின் கிராக்கோவ் பல்கலைகழகத்தில் கணிதமும் வானியலும் கற்றார். இவரது மாமனாரின் செல்வாக்கால் ஆலயத்தில் அதிகாரியாகப் பணியாற்றினாலும் அதில் கிடைத்தப் பணத்தைத் தனது மேல்படிப்புக்குச் செலவிட்டார். இத்தாலியின் பொலோஞ்ஞா, பதுவா, ஃபெராராப் பல்கலைக்கழகங்களில் சட்டமும் மருத்துவமும் பயின்றார். பொலோஞ்ஞா பல்கலைக்கழகத்தில் படித்த போது வானியலில் இவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது. கணித ஆசிரியரின் வீட்டில் தங்கியிருந்த போது அக்காலத்திய வானியல் குறித்த கேள்விகளைக் கேட்கத் தூண்டுதல் பெற்றார். இத்தாலியில் படிப்பை முடித்து போலந்து சென்று ஆயரான மாமனாரின் மாளிகையில் வாழ்ந்து வந்தார். கோப்பர்னிக்கஸ் காலத்தில் பல வானியல் நிபுணர்கள், அதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க வானியலாளர் டாலமி (Ptolomy) கண்டுபிடித்த கோட்பாட்டை நம்பிக் கொண்டிருந்தனர். அதாவது இந்தப் பூமியே இவ்வண்டத்தின் மையம். அது அசையாமல் இருக்கிறது. மற்ற விண்கோள்கள் அனைத்தும் பூமியைச் சுற்றி வருகின்றன என்பது டாலமியின் கோட்பாடு. ஆனால் கோப்பர்னிக்கஸ் அக்கோட்பாடு தவறு எனக் கருதினார். 1507க்கும் 1515க்கும் இடைப்பட்ட காலத்தில் அனைத்துக் கோளங்களும் சூரியனை மையம் கொண்டிருக்கின்றன என்ற கோட்பாட்டை வெளியிட்டார். டெலஸ்கோப்பின் உதவியுடன் கலிலேயோ விண்கோள்களை ஆராய்ச்சி செய்யத் தொடங்கிய 50 ஆண்டுகளுக்கு முன்னரே கோப்பர்னிக்கஸ் இறந்து விட்டார். ஆனால் கோப்பர்னிக்கஸ் எந்தத் தொலைநோக்குக் கருவியும் இல்லாமல் தனது கண்களால் பார்த்து இந்த உண்மையை வெளியிட்டார். அதாவது பூமி உட்பட அனைத்தும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்றார். 1600களில் கலிலேயோ போன்ற வானியல் நிபுணர்கள் கண்டுபிடித்த உண்மைகள் கோப்பர்னிக்கஸின் கண்டுபிடிப்புச் சரியெனச் சொல்லின. கோப்பர்னிக்கஸ், சூரியனை மையமாகக் கொண்ட சூரியக் குடும்பக் கோட்பாட்டை உருவாக்கியவர். புவி மையக் கோட்பாட்டுக்கு மாறாக, இவர் முன்வைத்த சூரிய மையக் கோட்பாடு மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. இக்கண்டுபிடிப்பே நவீன வானியலின் அடிப்படையாகும். நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் 1543ம் ஆண்டு மே 24ம் தேதி இறைபதம் எய்தினார். அவர் இறந்து 460 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அவர் நவீன வானியலுக்கு அடித்தளமிட்டவர் என்று நோக்கப்படுகிறார்.








All the contents on this site are copyrighted ©.