2011-05-23 16:41:33

பல்கேரியா நாட்டிலிருந்து வந்திருந்த பிரதிகளுக்கு திருத்தந்தையின் உரை


மே 23, 2011. புனிதர்கள் சிரில் மற்றும் மெத்தோடியசின் திருவிழாவை முன்னிட்டு உரோம் நகர் வந்திருந்த மாசடோனியக் குடியரசுப் பிரதிநிதிகளைப்போல், பல்கேரியா நாட்டிலிருந்து வந்திருந்த பிரதிகளையும் இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
பல்கேரிய பாராளுமன்றத் தலைவர் Tsetska Tsacheva தலைமையில் வந்திருந்த அந்நாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்தத் திருத்தந்தை, கிழக்கு ஐரோப்பாவின் ஆன்மீகப் புதுப்பித்தலுக்கும், சுதந்திர மேம்பாட்டிற்கும், ஐரோப்பியக் கிறிஸ்தவத்தின் ஐக்கியத்திற்கும் புனிதர்கள் சிரிலும் மெத்தோடியசும் ஆற்றியுள்ளப் பணிகளை நினைவு கூர்ந்தார்.
இவர்கள் மூலம் கிறிஸ்தவ விசுவாசமானது அன்றைய ஐரோப்பியக் கண்டத்தில் திளைத்து அதன் வரலாற்றோடு இரண்டறக் கலந்துள்ளது என்றார். மக்களிடையேயான பலன் தரும் ஒத்துழைப்பிற்கும் ஆழமான ஒன்றிணைந்த வாழ்வுக்கும் தன்னை அர்ப்பணித்து உழைக்க ஐரோப்பா அழைப்புப் பெற்றுள்ளது என்ற பாப்பிறை, இது பொருளாதாரக் கொள்கைகளால் மட்டுமல்ல, மாறாக மனித இதயத்தில் எழுதப்பட்டுள்ள தொன்மை மதிப்பீடுகளின் அடிப்படையிலும் பெறப்படவேண்டும் என மேலும் கூறினார்.
இவ்விரு நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்த பின், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத் பேராயரும் வாரங்கலின் அப்போஸ்தலிக்க நிர்வாகியுமான பேராயர் தும்மா பாலா, மற்றும் விசாகப்பட்டணம் பேராயர் மரியதாஸ் காகிதப்பூ ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்து உரையாடினார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.