2011-05-23 16:41:21

ஒன்றிணைந்த அமைதி வாழ்வு மற்றும் ஒப்புரவிற்கான அடிப்படைக்கூறுகள், இறைவனின் மீட்புத் திட்டத்தில் காணப்படுகின்றன


மே 23, 2011. புனிதர்கள் சிரில் மற்றும் மெத்தோடியஸ் அறிவித்த நற்செய்தியும் சாட்சியமும் அன்றைய மக்களின் பாரம்பரியம் மற்றும் வெவ்வேறு கலாச்சாரங்களின் ஐக்கியத்திற்கு உதவுவதாக இருந்தது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
முன்னாள் யூக்கோஸ்லாவியா குடியரசான மாசடோனியாவின் அரசுத்தலைவர் Gjorge Ivanov மற்றும் அவருடன் வந்திருந்த அந்நாட்டு பிரதிநிதிகள் குழுவை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அப்பகுதியில் நற்செய்தியை அறிவித்த இப்புனிதர்களின் எடுத்துக்காட்டு இன்றும் அனைவருக்கும் பயன் தரவல்லதாக உள்ளது என எடுத்துரைத்ததோடு, ஒன்றிணைந்த அமைதி வாழ்வும், ஒப்புரவும் கொண்ட சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படைக் கூறுகளை இறைவனின் மீட்புத் திட்டத்தில் கண்டு கொள்ளலாம் என்றார்.
மனிதனுக்குரிய மீற முடியாத உரிமைகளையும் மனித மாண்பையும் மதிக்காமல் நம்மால் ஐக்கியத்தில் வாழமுடியாது என்பதைச் சுட்டிக்காட்டிய பாப்பிறை, சுயநலமான நம் ஒவ்வொரு நோக்கங்களும் சுத்திகரிக்கப்பட்டு புனிதப்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளதால், உள்மன மாற்றத்திற்கான அழைப்பை இறைவார்த்தை தொடர்ந்து விடுத்துக்கொண்டே இருக்கின்றது என மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.