2011-05-21 15:25:15

மே 22, வாழந்தவர் வழியில்...


"புது யுக இந்தியாவின் தந்தை" (Father of Modern India) என்ற பெருமைக்கு உரியவர் இராஜா இராம் மோகன் இராய். இவர் வங்காளத்தின் இராம் நகர் எனும் கிராமத்தில் 1772ம் ஆண்டு மேமாதம் 22ம் தேதி பிறந்தார்.
குழந்தைப் பருவத்தில் மும்முறை இவருக்குத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அவர் காலத்தில் இந்தியாவில் பெருகியிருந்த உடன்கட்டை ஏறும் பழக்கத்தையும் இவர் நன்கு அறிந்திருந்தார். இவ்விரு கொடிய பழக்கங்களையும் இந்தியாவிலிருந்து முற்றிலும் அகற்ற மிகத்தீவிரமாக உழைத்தார் இராஜா இராம்.
வேதங்களையும், உபநிஷதங்களையும் ஆழமாகக் கற்ற இராஜா இராம், இன்னும் பல மதக் கோட்பாடுகளையும் ஆர்வமாகக் கற்றறிந்தார். 1803ம் ஆண்டு முதல் இவர் எழுதிய பல கட்டுரைகளில் உண்மைக் கடவுள் ஒருவர் என்றும், அவரை அடையும் வழிகள் பற்றியும் அழகாக எழுதி வந்தார்.
"அமைதிக்கும் மகிழ்வுக்கும் வழிகாட்டும் இயேசுவின் போதனைகள்" என்ற தலைப்பில் 1820ம் ஆண்டு இவர் இயேசுவின் நன்னெறிப் பாடங்களைத் தொகுத்து வழங்கினார். இவரது கருத்தாழம் மிக்க கட்டுரைகள் வங்காள மொழியில் வெளிவந்ததால், அந்த மொழியை ஓர் உயரிய நிலைக்கு கொணர்ந்து, அம்மொழியை உலகறியச் செய்தது இராஜா இராம் என்று சொல்லப்படுகிறது.
1828ம் ஆண்டு இவர் உருவாக்கிய 'பிரம்மா சமாஜ்' என்ற இயக்கத்தின் மூலம் பல புதிய எண்ணங்களையும், புரட்சிகரமான மாற்றங்களையும் இந்திய சமுதாயத்தில் இவர் கொண்டு வர முயன்றார்.முகலாய மன்னர் அக்பர்ஷாவின் தூதராக 1831ம் ஆண்டு இவர் இங்கிலாந்து சென்றார். 1833ம் ஆண்டு இவர் மீண்டும் இங்கிலாந்து சென்றபோது, அங்கு நோயுற்று, அவ்வாண்டு செப்டம்பர் 27ம் தேதி காலமானார். இந்து மதத்திலும், இந்தியாவிலும் மறுமலர்ச்சியைக் கொணர முயன்ற இராஜா இராம் மோகன் இராய் உலக அறிஞர்களில் ஒருவராக இன்று போற்றப்படுகிறார்.







All the contents on this site are copyrighted ©.