2011-05-18 15:36:30

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


மே 18, 2011. நாம் கடந்த வாரமே கூறியதுபோல் உரோம் நகரின் காலநிலை கோடைகாலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாலும், காலைச்சூரியனின் கதிர்கள் இதமான வெப்பத்தைக் கொண்டிருப்பதால், இவ்வாரமும் திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம், புனித பேதுரு பேராலய வளாகத்திலேயே இடம்பெற்றது. கிறிஸ்தவ செபம் குறித்த மறைபோதகத்தொடரை அண்மையில் துவக்கியுள்ள திருத்தந்தை, இவ்வாரம், விவிலியம் காட்டும் செபம் குறித்துத் தொடர்ந்தார்.
கிறிஸ்தவ செபம் குறித்த நம் மறைக்கல்வி போதனைகளின் தொடர்ச்சியாக இன்று, விவிலியத்தை நோக்கி, வார்த்தை மனுவுருவான இயேசுகிறிஸ்துவில் தன்முழுமையைக் கண்ட இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான உரையாடல் வரலாற்றில் இடம்பெற்றதற்கு சாட்சியாக நிற்கும் அந்த விவிலியம் நோக்கி திரும்புவோம் என மறைபோதகத்தை வழங்கினார் பாப்பிறை.
பாவம் நிறைந்திருந்த சோதோம் நகரை அழிவுக்குள்ளாக்க வேண்டாம் என அனைத்து விசுவாசிகளின் தந்தையாகிய ஆபிரகாம் இறைவனை நோக்கி வேண்டிய செபத்துடன் இன்று நாம் துவங்குவோம். பாவநிலையில் இருப்போருடன் இணைந்து அப்பாவிகளையும் அழிக்கவேண்டாம் என வேண்டிய ஆபிராமின் பரிந்துரைச் செபம் இறைவனின் நீதிக்கு அழைப்பு விடுப்பதாய் இருந்தது. அதேவேளை அது, மன்னிப்பு மற்றும் ஒப்புரவு மூலம் தீமையையும் நன்மையாக மாற்ற வல்ல இறை இரக்கத்தையும் வேண்டுவதாக இருந்தது. இறைவன் பாவியின் மரணத்தின் மீது ஆவல் கொள்வதில்லை, மாறாக அவனின் மனமாற்றத்தையும் பாவத்திலிருந்து அவன் பெறும் விடுதலையையும் எதிர்பார்க்கிறார். ஆபிரகாமின் செப விண்ணப்பத்திற்குப் பதிலளித்த இறைவன், சோதோம் நகரில் பத்து நீதிமான்கள் இருந்தாலே போதும் அந்நகரை அழிவிலிருந்து விடுவிப்பதாக அறிவித்தார். பின்னொரு சமயம், ஒரு நீதிமான் இருந்தாலும் போதும் அவர் பொருட்டு எருசலேம் நகரை மன்னிக்க தயாராக இருப்பதாக இறைவாக்கினர் எரேமியா வழியாக வாக்குறுதி அளிக்கிறார் இறைவன். இறுதியில், மனுவுரு எடுத்த மறையுண்மையில் இறைவனே அந்த நீதிமானாக மாறுகிறார். சிலுவையில் தொங்கியபோது இயேசு விடுத்தப் பரிந்துரை செபம், இவ்வுலகிற்கு மீட்பைக் கொணர்ந்தது. நமது செபங்கள் செவிமடுக்கப்பட்டு பதிலுரைக்கப்படும் என்ற உறுதியான உணர்வுடனும், மனிதகுலமனைத்திற்குமான இறைவனின் இரக்கம் நிறை அன்பின் மீதான அசையா நம்பிக்கையுடனும் கிறிஸ்து வழியாக நம் செபங்களை எழுப்புவோம்.
இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும், குறிப்பாக இந்தியா, இலங்கை,இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, சீனா ஆகிய நாடுகளிலிருந்தும் வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்தி தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.