2011-05-18 16:05:45

சீனக்கிறிஸ்தவர்களுக்காகச் செபிக்குமாறு வேண்டுகிறார் பாப்பிறை


மே 18,2011. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை சீனாவில் அதிகரித்து வருகின்றபோதிலும், அங்கு கிறிஸ்து ஒதுக்கப்பட்டு, சித்ரவதைப்படுத்தப்படுவதும் தொடர்வதாக தன் புதன் மறைபோதகத்தின் இறுதியில் உரைத்த திருத்தந்தை, சீனத்திருச்சபைக்காகச் செபிக்க வேண்டியது அனைத்து கிறிஸ்தவர்களின் ஓர் உறுதிப்பாடாக மாறவேண்டும் என அழைப்பு விடுத்தார்.
சீனாவிலுள்ள ஷங்கையின் ஷேஷான் மரியன்னை திருத்தலத்தில் இம்மாதம் 24ம்தேதி சகாய அன்னை விழா சிறப்பிக்கப்பட உள்ளதைப்பற்றியும் குறிப்பிட்ட பாப்பிறை, அகில உலகத் திருச்சபையுடனான ஐக்கியத்திற்கு தன் ஆவலை பலவேளைகளில் வெளிப்படுத்தியுள்ள சீனத்திருச்சபை, நம் அனைவரின் அன்புக்கும் செபத்திற்கும் தகுதியுடையது என்பதை மனதிற்கொண்டு சிறப்பான விதத்தில் அன்னை மரி நோக்கி நம் செபங்களை எழுப்புவோம் என அழைப்பு விடுத்தார்.
தங்கள் ஆயர் பணிகளை மேற்கொள்வதில் தடைகளை எதிர்நோக்கும் சீன ஆயர்கள், ஏனைய குருக்கள் மற்றும் கத்தோலிக்க விசுவாசிகளுடன் நம் அருகாமையையும் வெளிப்படுத்துவோம் என்றுரைத்தார் திருத்தந்தை.அகில உலகத் திருச்சபையிலிருந்து பிரிந்து செல்வதற்கான சோதனைகளைக் கைவிட்டு, தலைமைத் திருச்சபையுடனேயே ஒன்றித்திருக்கவும், விசுவாசம், பிறரன்பு மற்றும் நம்பிக்கையில் நிலைத்திருக்கவும், சீன கிறிஸ்தவர்களுக்காக அன்னை மரியின் பரிந்துரையின் வழி இறைவனை நோக்கி செபிப்போம் என மேலும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.