2011-05-16 16:08:00

வாரம் ஓர் அலசல் –“குடும்பம் ஓர் அன்பு இல்லம்”


மே 16, 2011. அந்தத் தந்தை அன்று வேலை முடிந்து மிகவும் களைப்படைந்தவராய்த் தாமதமாக வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது ஐந்து வயது மகன் அவருக்காக வீட்டுக் கதவருகில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து எரிச்சல் அடைந்தார். அவன் தந்தையிடம், அப்பா, உங்களிடம் ஒரு கேள்வி கேட்கட்டுமா? என்றான். ஓ, கேள் என்றார் தந்தை. ஒரு மணி நேரத்தில் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள்? என்றான். தந்தைக்குக் கோபம். இதற்கும் உனக்கும் தொடர்பு கிடையாது. வாயை மூடிக்கொண்டு சும்மா இரு என்றார். “அப்பா, தயவு செய்து சொல்லுங்கள்” என்று சிறுவன் கெஞ்சினான். ஆமாம் 90 ரூபாய், இப்ப அதற்கென்ன? என்றார். அப்பா, தயவு செய்து 40 ரூபாய் மட்டும் தாருங்களேன் என்றான். அப்பாவுக்கு பயங்கரக் கோபம். சும்மா போய்ப் படு. உனக்குப் பொம்மையோ வேறு எதோ வாங்குவதற்குக் காசு தர முடியாது. போய்த் தூங்கு என்றார். அவனும் போய் முகத்தைத் தலையணையில் புதைத்துக் கொண்டு படுத்தான். அவன் சென்ற பின்னர் அப்பா சிந்தித்தார். இவன் அடிக்கடிப் பணம் கேட்டு நச்சரிப்பதில்லை. இன்று ஏதோ பொருள் வாங்குவதற்குப் பணம் தேவைப்பட்டிருக்கும் என்று நினைத்து அவனது படுக்கைக்குச் சென்று அன்பாகக் கூப்பிட்டார். செல்லமே தூங்கிட்டியா? என்றார். இல்லை அப்பா என்றான் சிறுவன். நான் உன்னிடம் சிறிது கடுமையாக நடந்து கொண்டேன். இந்தா நீ கேட்ட பணம் என்றார். சிறுவனுக்கு அப்படியொரு மகிழ்ச்சி. நன்றி டாடி நன்றி டாடி என்று படுக்கையிலிருந்து துள்ளிக் குதித்து எழுந்தான். பின்னர் தலையணையை மெதுவாகத் தூக்கி அவன் சேர்த்து வைத்திருந்த காசுகளை எடுத்தான். இதைப் பார்த்ததும் அப்பாவுக்கு மூக்குக்கு மேல் கோபம். உன்னிடம் ஏற்கனவே பணம் இருக்கும் போது எதற்காக என்னிடம் கேட்டாய்? என்றார். “அப்பா எனக்கு 90 ரூபாய் தேவைப்பட்டது. இப்பொழுது இருக்கிறது. இந்தாங்க பணம். அப்பா உங்களது நேரத்தில் ஒரு மணி நேரத்தை விலைக்கு வாங்க முடியுமா?. தயவு செய்து நாளைக்கு ஒரு மணிநேரம் முன்னதாக வாருங்கள். நான் உங்களோடு அமர்ந்து சாப்பிட வேண்டும்” என்றான்.
அன்பு நேயர்களே, இந்த நிகழ்வை ஒருவேளை நீங்கள் ஏற்கனவே கேட்டிருக்கலாம். ஆனால் வேலை வேலை என்று குடும்பத்தைக் கவனிக்காமலும் பிள்ளைகளுக்கென நேரம் ஒதுக்காமலும் வாழும் பெற்றோருக்கு இது நல்லதொரு பாடம். சில தந்தையருக்குத் தனது பிள்ளைகள் எந்த வகுப்புப் படிக்கிறார்கள், எவ்வளவு மதிப்பெண்கள் எடுக்கிறார்கள், வகுப்பில் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள், பள்ளி முடிந்து வீட்டிற்கு வராமல் எங்கே யாருடன் செல்கிறார்கள்... இப்படிப்பட்ட பல கேள்விகளுக்குப் பதிலே தெரியாது. ஒருநாள் ஒரு தந்தையிடம் கேட்டேன், “சார், உங்க பையன் எந்த வகுப்புப் படிக்கிறான், மதிப்பெண்களாம் எப்படி எடுக்கிறான்?” என்று. அதற்கு அவர், அதுக்கெல்லாம் எங்கே நேரம், வீட்டில இருக்கிறவங்க பார்த்துக் கொள்வார்கள் என்றார். இன்று இப்படிப்பட்ட பெற்றோரின் எண்ணிக்கைக் கணிசமாக அதிகரித்து வருகிறது. வேலை, பணம், சமூகத்தில் கவுரவம், விடுதி விருந்துகள், பார்ட்டிகள் என்று செல்வதற்குத்தான் நேரம் சரியாக இருக்கின்றது. குடும்பத்தில் பிள்ளைகளுடனும் மனைவியுடனும் அமர்ந்து பேசுவதற்கு நேரம் இல்லை. அப்படி வீட்டிற்கு வந்தாலும் தினத்தாள், வலைத்தளம், தொலைக்காட்சி என்றும் நேரம் கடந்து விடுகிறது. இதன் விளைவு எப்படி என்று இன்றையப் பல குடும்ப நிலைமைகள் பதில் சொல்கின்றன.
சமுதாயக் கட்டுக்கோப்பைப் பற்றிச் சொல்ல வந்த சிசேரோ (Cicero) “திருமணம் சமுதாயக் கட்டுக்கோப்பின் ஆணிவேர்” என்றார். இன்றையப் பணக்கார நாடுகளைப் பார்க்கும் போது திருமணத்தின் அர்த்தம் மாறி வருவது போல் தெரிகின்றது. கட்டுக் கோப்பானத் திருமணங்கள் மிகக் குறைவு. திருமணம் என்பதற்கு எதிர்ப்பதம் திருமணமுறிவு. இன்று உலகிலே அமெரிக்க ஐக்கிய நாட்டில்தான் திருமணமுறிவுகள் அதிகமாக இடம் பெறுவதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்நாட்டில் ஓராண்டில் நடைபெறும் திருமணங்களில் பாதி திருமணமுறிவுகளில் முடிவடைகின்றன. அமெரிக்கர்கள் குடும்ப விழுமியங்களோடு தொடர்பற்று இருக்கிறார்கள் என்றுகூடச் சொல்கிறார்கள். இந்நாட்டில் ஆயிரத்துக்கு 400 திருமணங்கள் முறிந்து விடுகின்றன. இந்தியாவில் இந்த எண்ணிக்கை குறைவு. அதாவது ஆயிரம் திருமணங்களுக்கு 11 என்ற நிலை இருக்கின்றது. இந்நிலை 1990களில் ஆயிரத்துக்கு 7.40 என்ற நிலையிலேதான் இருந்தது. இப்பொழுது இந்தத் திருமணமுறிவுகள் அதிகரித்து வருவதற்கு, இளைய சமுதாயத்தினரின் எண்ணச் சுழற்சியால் அவர்களது எதிர்பார்ப்புகள் மாறி வருவது காரணமாகச் சொல்லப்படுகிறது.
திருமணங்கள் நிலைத்து நிற்காவிட்டால் பிள்ளைகளை எப்படி எதிர்பார்க்க முடியும்?, கட்டுக்கோப்பானக் குடும்பங்களை எப்படி உருவாக்க முடியும்? குடும்பங்கள் இல்லையென்றால் ஒரு சமூகத்தையோ ஒரு நாட்டையோ கட்டி எழுப்புவது எப்படி? இன்று திருத்தந்தை உட்பட பல சமயத் தலைவர்களையும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தையும் ஏன் நாடுகளையும் இந்தப் பிரச்சனை மிகவே கவலைக்கு உள்ளாக்கி இருக்கின்றது. ஒரு சமூகத்தின் ஆணிவேராக இருக்க வேண்டிய குடும்பங்கள் அதன் உள்ளார்ந்த பொருளையே இழந்து வருகின்றன. எனவே உறுதியானக் குடும்பங்களைத் தாங்கிப் பிடிக்கும் நோக்கத்தில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை 1994ம் ஆண்டில் அனைத்துலக குடும்ப ஆண்டை அறிவித்தது. அதன் பின்னர் 1995ம் ஆண்டிலிருந்து மே மாதம் 15ம் தேதி அனைத்துல குடும்ப தினமாகவும் கடைபிடிக்கத் தொடங்கியது. மனித சமுதாயத்தின் அடிப்படைக்கூறுகள் குடும்பங்கள் என்பதை வலியுறுத்தி இந்த உலக நாள் கடைபிடிக்கப்படுகிறது. இஞ்ஞாயிறன்றும் இத்தினம் அனுசரிக்கப்பட்டது. வானொலி நேயர்களே, நீங்கள் இந்த அனைத்துலக குடும்ப நாளில் குடும்பமாகச் சேர்ந்து கொண்டாடினீர்களா?, எப்படிச் சிறப்பித்தீர்கள்? என்பதை அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்புங்கள். இதயமில்லா உலகில் புகலிடமாக இருப்பது குடும்பம். வயதான காலத்திலும்கூட நாம் ஒவ்வொருவரிலும் பசுமையான நினைவுகளை அள்ளி வருவது நமது குடும்ப அனுபவங்களே.
ஒரு நல்ல குடும்பம் அமைவதற்கு குடும்பத்தில் வாழும் நேயர்களாகிய நீங்களே உங்கள் அனுபவங்களை வைத்து கட்டுரையே எழுதி விடுவீர்கள். நல்லதொரு குடும்பம் பற்றி பக்கம் பக்கமாக துணுக்குகளும் கவிதைகளும் கட்டுரைகளும் கதைகளும் இருக்கின்றன. எவ்வளவு இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே குடும்பம் என்ற கோவில் அமையும். குடும்பம் என்ற நல்லதொரு பல்கலைக்கழகம் உருவாகும். வேதாத்திரி மகரிஷி சொல்கிறார் –
1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே. 2. கணவன் - மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது. 3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது. 4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியைக் குலைக்கும். ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் சம்பாதிக்கும் திறன் வேண்டும் அல்லது பெரும்பாலானோர் சம்பாதிக்கும் திறனைப் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம், சிலர் குறைவாகச் சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதைக் காப்பது, நுகர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும். 6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம் தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் அங்கே தெய்வீக உறவு இருக்காது. 7. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகிய மூன்றையும் கடைப்பிடித்து வர வேண்டும். 8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிவகுக்கும். 9. தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடிமனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். 10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும்.
இந்த அவசர உலகத்தில் பணம், வசதி, ஆடம்பரம் போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்துவதால் பிறரைப் பற்றிய எண்ணம் மங்கிப் போய் விடுகிறது. சுயநலம் கூடுகட்டி குடியிருக்கிறது. உண்மையான அன்பு அரிதாகிப் போய் விட்டது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த வீட்டில் மூன்று வயதுச் சிறுமி தங்கநிற ஒட்டுத்தாள்களையெல்லாம் கிழித்து ஒரு சிறிய டப்பாவைச் சுற்றி ஒட்டிக் கொண்டிருந்தாள். அந்த வீட்டில் கொஞ்சம் பணக்கஷ்டம். எனவே இச்சிறுமி இப்படித் தாளை வீணாக்கியதைப் பார்த்து அவளது தந்தை மிகவும் கோபமடைந்தார். அவள் அதைக் கண்டு கொள்ளவே இல்லை. அடுத்த நாள் காலையில் அந்தச் சிறுமி அந்த பெட்டியை அப்பாவிடம் கொண்டு போய்க் கொடுத்தாள். அதைத் திறந்து பார்த்தார். அது வெறும் டப்பா. உள்ளே ஒன்றுமே இல்லை. அவரது கோபம் உச்சத்துக்குப் போனது. அப்போது அச்சிறுமி தனது கண்ணீரைத் துடைத்துக் கொண்டு விம்மி விம்மிச் சொன்னாள் – “அப்பா, அப்பா, அந்த டப்பா காலியான டப்பா இல்லை. அதை முழுவதும் எனது முத்தங்களால் நிறைத்துள்ளேன். உங்களுக்கான எனது முத்தங்களை ஊதி ஊதி நிரப்பினேன்” என்று. இதைக் கேட்ட அந்தத் தந்தை மகளை வாரி அணைத்து முத்தமழை பொழிந்தார். தனது செயலுக்காக மிகவும் வருந்திக் குழந்தையிடம் மன்னிப்பும் கேட்டார். இது நடந்து சில நாட்களில் அச்சிறுமி விபத்தில் இறந்து விட்டாள். அந்தத் தந்தை அந்த டப்பாவை வெகு நாட்கள் வைத்திருந்தார் என்றும், எப்பொழுதெல்லாம் சோர்வு ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அவர் அந்த டப்பாவைத் திறந்து குழந்தையின் அன்பு முத்தங்களை நினைத்து ஆறுதல் அடைந்தார் என்றும் வாசித்தோம்.
ஆம் அன்பர்களே, நம் குடும்பங்களில் ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தைகளிடமிருந்தும், குழந்தைகளுக்குக் குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்து வரையறையற்ற அன்பையும் அந்த அன்பு முத்தங்களையும் கொண்ட தங்க டப்பாக்கள் கொடுக்கப்படுகின்றன. இதைவிட மேலான பொக்கிஷம் நமக்குத் தேவையா? குடும்பம் அன்பு பொழியும் கோவிலாக அமைய இதைவிட வேறு என்ன தேவை?








All the contents on this site are copyrighted ©.