2011-05-16 15:59:45

    வட இந்திய ஆயர்களுடன் திருத்தந்தையின் சந்திப்பு



மே 16, 2011. திருச்சபைக்குள் விசுவாசிகள் ஒவ்வொருவரும் விசுவாசத்திலும் அன்பிலும் பணியிலும் திளைத்து வளர, உறுதியான மறைக்கல்வி படிப்பினைகளுடன் வழிநடத்திச் செல்லப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஐந்து ஆண்டிற்கு ஒருமுறை இடப்பெறும் 'அட் லிமினா' சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த வட இந்தியாவைச் சேர்ந்த இலத்தீன் ரீதி ஆயர்களின் ஒரு குழுவை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, நற்செய்திக்கான சாட்சிய வாழ்வை மேற்கொள்ளும் கிறிஸ்தவ அர்ப்பணமானது ஒவ்வொரு காலத்திலும் இடத்திலும் எதிர்நோக்கி வரும் சவால்களையும் சுட்டிக்காட்டி, இத்தகைய வேளைகளில் கிறிஸ்தவச் சமூகமானது தன் விசுவாசத்திற்கான நேர்மையையும் உண்மைத்தன்மையையும் எதிர்பார்க்கின்றது என்றார். தாங்கள் பணிபுரியும் சமூகங்களின் மொழி மற்றும் பழக்கமுறைகளுக்கு ஏற்ப, கலாச்சாரமயமாக்கலின் முக்கியத்துவம் குறித்தும் திருத்தந்தை இந்திய ஆயர்களிடம் எடுத்துரைத்தார். மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகள் பற்றியும் எடுத்தியம்பிய திருத்தந்தை, உண்மை எதுவோ அதற்கு மதிப்பளித்து, மதச்சுதந்திரம் மற்றும் வழிபாட்டுச்சுதந்திரம் போற்றி பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மதச்சகிப்புத்தன்மை என்பது அனைத்து மதங்களுக்கும் பயன் தரக்கூடியது என்பதைக் கிறிஸ்தவர்கள் தங்களின் பிறரன்பு மற்றும் சகிப்புத்தன்மை மூலம் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.