2011-05-16 16:01:09

சிறுபான்மையினரின் பேச்சுரிமைக்குப் பாதகமாக அமையும் இணையதளம் குறித்த இந்திய அரசின் புது விதிமுறைகள்


மே 16,2011. இணையதளம் குறித்து இந்திய அரசு விதித்துள்ள புது விதிமுறைகள் சிறுபான்மையினரின் பேச்சுரிமைக்குப் பாதகமாக அமைந்துள்ளதென்று இந்தியத் திருச்சபை தெரிவித்துள்ளது.
வன்முறைகளைத் தூண்டும் வாசகங்கள், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வார்த்தைகள், பொது நலனைக் கெடுக்கும் எண்ணங்கள் போன்றவைகளை அரசு அனுமதிக்காது என்று கூறும் இந்த விதிமுறைகள், கண்டனத்திற்குரிய எவ்வகை இணையதளப் பகுதிகளையும் எச்சரிக்கை ஏதும் இல்லாமல் அரசு 36 மணி நேரத்திற்குள் நீக்கும் உரிமை உள்ளதென்றும் கூறுகிறது.
அரசு விதித்துள்ள இந்த விதி முறைகள் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடும் என்ற அச்சத்தை இந்திய திருச்சபை பொறுப்பாளர்கள் பலர் வெளியிட்டுள்ளனர்.
இந்த விதிமுறைகளால் சிறுபான்மையினர் இணையதளத்தில் வெளியிடும் எண்ணங்களும் கருத்துக்களும் தடை செய்யப்படும் என்று இந்திய சமூகத் தொடர்பு ஆய்வு மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குனர் அருள்தந்தை Jude Botelho கூறினார்.
கிறிஸ்தவர்கள் இணையதளத்தில் வெளியிடும் பல கருத்துக்கள் மதமாற்றத்திற்குத் தூண்டிவிடுகிறது என்று குறைகூறி, இந்து அடிப்படை வாதிகள் இக்கருத்துக்களைத் தடை செய்ய அரசை வலியுறுத்தும் வாய்ப்பு உள்ளதென்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் சமூகத் தொடர்புப் பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை George Plathottam கூறினார்.








All the contents on this site are copyrighted ©.