2011-05-13 15:40:21

மே 14. வாழ்ந்தவர் வழியில் ....


இங்கிலாந்து மருத்துவர் எட்வர்ட் ஜென்னர் என்பவரால் 1796ம் ஆண்டு பெரியம்மை நோய்க்கான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட நாள் மே 14.
பெரியம்மை, மனிதர்களை மட்டும் தாக்கும் அதிகத் தொற்றுத் தன்மை கொண்ட நோயாகும். இக்கிருமி தாக்கியவர்களுள் 20 முதல் 40 விழுக்காட்டினர் இறந்து விடுகின்றனர். உயிர் பிழைத்தவர்களில் பலரும், பார்வையை இழப்பதுடன், நீங்காத தழும்புகளையும் பெறுகின்றனர். 20ம் நூற்றாண்டில் இந்நோய் காரணமாக 30 கோடி முதல் 50 கோடி மக்கள் இறந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 1967ல் உலக நலவாழ்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி அந்த ஆண்டு மட்டும் 1கோடியே 50 இலட்சம் மக்கள் அந்நோயால் பீடிக்கப்பட்டு அவர்களுள் இருபது இலட்சம் பேர் இறந்தனர். எட்வர்ட் ஜென்னர் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை 1796ல் கண்டுபிடித்தார்.
1977ம் ஆண்டே உலகிலிருந்து பெரியம்மை நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது என உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்திருந்த போதிலும், 1978ம் ஆண்டு, இங்கிலாந்தின் பிர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் சோதனைச்சாலையிலிருந்து தவறுதலாக வெளியேறிய இந்நோய்க்கிருமியால், மருத்துவப் புகைப்படக்காரர் ஜெனட் பார்க்கர் இந்நோயைப் பெற்று அதற்கு பலியானார். அவர் மூலம் அவரின் தாயும் இந்நோய்க்கிருமிகளின் பாதிப்புகளுக்கு உள்ளானார். இச்சோதனைச்சாலையின் தலைவர் ஹென்றி பெட்சன், இத்தவறுக்குப் பொறுப்பேற்று தற்கொலைச் செய்துகொண்டார்.
வரியோலா என்ற இத்தொத்துக்கிருமியை அமெரிக்க ஐக்கிய நாடும் இரஷ்யாவும் தங்கள் சோதனைச்சாலைகளில் வைத்து காப்பாற்றி வருகின்றன. இந்நோய் மீண்டும் தலையெடுக்கும் பட்சத்தில் அது குறித்து ஆய்வு செய்து உடனடியாக கட்டுப்படுத்த இந்த நுண்கிருமிகள் உதவும் என்பது அவைகளின் வாதம். ஆனால், இக்கிருமிகளை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும், சோதனைச்சாலைகளிலும் பாதுகாக்கப்படக்கூடாது என்ற சில அறிவியலாளர்களின் அழைப்பு, இம்மாதம் 16 முதல் 24 வரை சுவிட்சர்லாந்தில் கூட உள்ள உலக நல அமைப்பான WHO வின் ஆண்டு கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. 1974ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 15,000க்கும் மேற்பட்டோர் இந்நோய்க்குப் பலியாயினர். 1975ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் எவரும் இந்நோயால் பாதிக்கப்படவும் இல்லை, பலியாகவும் இல்லை என்று சொல்லப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.