2011-05-13 15:28:32

திருத்தந்தை: அன்பின் ஐக்கியத்தில் ஆணும் பெண்ணும் இணையும்போது, மனித வாழ்வு முன்னெடுத்துச் செல்லப்படுகிறது


மே 13,2011. திருமணம் மற்றும் குடும்பம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் பெயரிலான திருப்பீட நிறுவனத்தின் அங்கத்தினர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்தப் பாப்பிறை 16ம் பெனடிக்ட், திருமண உறவுகளின் நோக்கம் குறித்து எடுத்தியம்பினார்.
30 ஆண்டுகளுக்கு முன்னால் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், குடும்பங்களுக்கான திருப்பீட அவையையும், தன் பெயரிலான திருப்பீட நிறுவனத்தையும் ஒரே நேரத்தில் துவக்கி வைத்ததை நினைவுகூர்ந்த பாப்பிறை, 'மனித இயல்பு கொண்ட உடல் உண்டென்றால், ஆவிக்குரிய உடலும் உண்டு' என்ற தூய பவுலின் வார்த்தைகளை மேற்கோள்காட்டி உரையாற்றினார்.
ஓவியர் மிக்கேலாஞ்சலோ சிஸ்டைன் சிற்றாலயத்தில் வரைந்த ஓவியங்களில் நிர்வாண நிலையில் மனிதர்கள் வரையப்பட்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டிற்கு அன்றைய திருத்தந்தை வழங்கிய பதிலை மேற்கோள் காட்டிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஒளியாலும் அழகாலும் வாழ்வாலும் உடுத்தப்பட்டிருக்கும் நம் உடல், ஒரு மறையுண்மையை மறைத்து நிற்கிறது என்றார்.அன்பின் ஐக்கியத்தில் ஆணும் பெண்ணும் இணையும்போது, அங்கு மனித வாழ்வு முன்னெடுத்துச் செல்லப்படுகிறது; கற்பு எனும் புண்ணியத்திற்கு புது அர்த்தம் கிட்டுகிறது என மேலும் கூறினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.