2011-05-13 15:29:27

அகில உலக குடும்ப நாளையொட்டி சிங்கப்பூர் பேராயரின் செய்தி


மே 13,2011. ஒவ்வொரு குடும்பத்திலும் ஆழமான உறவுகளை உருவாக்க நேரம் ஒதுக்கப்பட வேண்டுமென்று சிங்கப்பூர் பேராயர் நிக்கோலஸ் சியா கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் 15ம் தேதியை அகில உலக குடும்ப நாள் என ஐ.நா. அறிவித்துள்ளது. இஞ்ஞாயிறன்று உலகெங்கும் கொண்டாடப்படும் குடும்ப நாளையொட்டி, சிங்கப்பூர் பேராயர் தன் மக்களுக்கு அனுப்பியுள்ள செய்தியொன்றில் குடும்ப உறவுகள் குறித்த இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அலுவலகத்தில் அதிக நேரம் பணி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம், வீட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் செலவிடப்படும் நேரம் என்று ஒரு நாளின் பெரும் பகுதி கழிவதால், குடும்பத்தினரிடையே உறவை வளர்க்கும் நேரம் குறைந்து வருகிறதென்ற கவலையை, பேராயர் தன் செய்தியில் வெளியிட்டார்.
இல்லங்களிலும் அலுவலகத்திலும் கருவிகளோடு கொள்ளும் தொடர்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பிற மனிதர்களுடன் நாம் கொள்ளும் உறவும் தொடர்பும் குறைந்து வருகிறதென்று பேராயர் சியா சுட்டிக் காட்டினார்.குடும்ப உறவுகள் வலுவற்றுப் போகும்போது, இளையோரிடையே மது, போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கும் ஆபத்து உள்ளதென்று கூறிய பேராயர், வாரத்தில் மூன்று நாட்களாகிலும் குடும்பமாய் கூடி வந்து இரவு உணவு அருந்துவது நல்லதொரு முயற்சியாக இருக்கும் என்று தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.