2011-05-12 15:35:38

ஒவ்வொரு நாளும் உலகில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது - ஐ.நா. அறிக்கை


மே 12,2011. ஒவ்வோர் ஆண்டும் உலகில் ஒரு பில்லியன், அதாவது, 100 கோடி டன் உணவு வீணாகிறது என்று ஐ.நா. அமைப்பின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
FAO எனப்படும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் பணித்த ஒரு ஆய்வினை மேற்கொண்ட சுவீடன் நாட்டு உணவு நிறுவனம் இப்புதனன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, ஒவ்வொரு நாளும் உலகில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறதென்று கூறப்பட்டுள்ளது.
வளரும் நாடுகளில் உணவு உற்பத்தி, மற்றும் பகிரும் முறைகள் இவற்றில் உள்ள குறைகளால் உணவு பாழடைகிறதென்றும், வளர்ந்துள்ள நாடுகளில் உணவு தேவைக்கும் அதிகமாகச் செய்யப்பட்டு, அவை வீணாக்கப்படுகிறதென்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
வளர்ந்துள்ள, தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் 670 மில்லியன், அதாவது 67 கோடி டன் உணவுப் பொருட்களும், வளரும் நாடுகளில் 630 மில்லியன், அதாவது, 63 கோடி டன் உணவும் வீணாக்கப்படுகின்றன என்று இவ்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.ஐரோப்பா, மற்றும் வட அமெரிக்காவில் வாழும் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வோர் ஆண்டொன்றுக்கு சராசரி 100 கிலோ எடையுள்ள உணவை வீணாக எறிகின்றனர் என்றும், ஆசியா, ஆப்ரிக்கப் பகுதிகளில் வாழும் ஒவ்வொரு மனிதரும் சராசரி 6 முதல் 11 கிலோ எடையுள்ள உணவை வீணாக எறிகின்றனர் என்றும் ஐ.நா.வெளியிட்ட இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.