2011-05-11 16:52:41

லிபியாவில் NATO அமைப்பு மேற்கொண்டுள்ள குண்டு வீச்சு, அப்பாவி பொதுமக்களையும் குழந்தைகளையும் காயப்படுத்தியுள்ளது - ஆயர் மர்தினெல்லி


மே 11,2011. போரை அல்ல அமைதியை உருவாக்கவே ஐ.நா.உலக அமைப்பு, முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று Tripoliன் திருப்பீட நிர்வாகி ஆயர் ஜியோவான்னி இன்னோசென்சோ மர்தினெல்லி கூறினார்.
லிபியாவின் அரசுத் தலைவர் Gaddafiன் ஆயுத பலத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் NATO அமைப்பு மேற்கொண்டுள்ள குண்டு வீச்சு, பல அப்பாவி பொதுமக்களையும் குழந்தைகளையும் காயப்படுத்தியுள்ளதென்று ஆயர் மர்தினெல்லி கூறினார்.
இத்திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் இரவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல்களில் லிபியாவின் தொலைக்காட்சி நிறுவனம், அரசு செய்தித்தொடர்பு நிறுவனம் ஆகியவைகள் தாக்கப்பட்டதுடன், குழந்தைகளுக்கான ஒரு நிறுவனமும் தாக்கப்பட்டுள்ளதென்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்த குண்டு வீச்சுகளால் பொது மக்கள் பெரிதும் கலவரம் அடைந்துள்ளனர் என்றும், தாய்மார்கள் குழந்தைகளுடன் தெருக்களில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் விடப்பட்டுள்ளதைக் காண முடிகிறதென்றும் ஆயர் மர்தினெல்லி சுட்டிக் காட்டினார்.லிபியாவில் ஏற்பட்டுள்ள இந்தப் பெரும் பிரச்சனையில் இத்தாலிக்கு பெரும் பங்கு உள்ளதென்று கூறிய ஆயர், Tripoliல் குண்டு வீசப்படுவதை நிறுத்துவதற்கு மக்கள் இறைவனை மட்டுமே நம்ப வேண்டியச் சூழல் உருவாகியுள்ளதென்ற தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.







All the contents on this site are copyrighted ©.