2011-05-11 16:52:56

புலம் பெயர்ந்தோருக்கானச் சட்டங்கள் கால தாமதமின்றி, தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் - லாஸ் ஆஞ்சலஸ் பேராயர்


மே 11,2011. புலம் பெயர்ந்தோருக்கானச் சட்டங்களை அமெரிக்க அரசும் அரசுத் தலைவரும் கால தாமதமின்றி, தெளிவாக வரையறுக்க வேண்டும் என்று லாஸ் ஆஞ்சலஸ் பேராயர் ஹோசே கோமஸ் கூறினார்.
அண்மையில் அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா புலம் பெயர்ந்தோரைக் குறித்து ஆற்றிய ஓர் உரைக்கு பதிலிறுக்கும் வகையில், அமெரிக்க ஆயர் பேரவையின் புலம்பெயர்வுப் பணிக்குழுவின் தலைவரான பேராயர் கோமஸ் இச்செவ்வாயன்று தன் கருத்தை வெளியிட்டார்.
அமெரிக்காவின் மத்திய அரசு புலம் பெயர்ந்தோருக்கென தெளிவானச் சட்டங்களை இயற்றாமல் காலம் தாழ்த்துவதால், ஒவ்வொரு மாநிலமும் இப்பிரச்சனையை வேறுபட்ட வழிகளில் தீர்க்க முயல்வது நாட்டில் குழப்பங்களை உருவாக்குவதாக பேராயர் சுட்டிக் காட்டினார்.இப்பிரச்சனைக்குத் தெளிவானத் தீர்வு இல்லாததால், பல குடும்பங்கள் சிதைக்கப்படுகின்றன என்றும், அமெரிக்க ஐக்கிய நாடு உலகின் பல நாடுகளில் இருந்தும் வருபவர்களை வரவேற்கும் ஒரு நாடாக இருப்பதே அந்நாட்டின் பெருமைக்குரிய வரலாறு என்றும் பேராயர் எடுத்துரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.