2011-05-11 16:53:21

கோவாவில் புகழ்பெற்ற புனித பிரான்சிஸ் சேவியர் பசிலிக்கா தீ விபத்துக்களைச் சந்திக்கும் ஆபத்தில் உள்ளது


மே 11,2011. கோவாவில் உள்ள புகழ்பெற்ற புனித பிரான்சிஸ் சேவியர் பசிலிக்கா தகுந்த பராமரிப்பு இல்லாமல், தீ விபத்துக்களைச் சந்திக்கும் ஆபத்தில் உள்ளதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பழமைச் சின்னங்களைக் காக்கும் அரசு அமைப்பின் கண்காணிப்பில் உள்ள இந்த 17ம் நூற்றாண்டு பேராலயம், கடந்த பல ஆண்டுகளாகச் சரியான பராமரிப்பு இல்லாததால், எந்த நேரத்திலும் தீக்கு இரையாகும் ஆபத்தில் உள்ளதென்று இக்கோவிலின் அதிபரான அருள்தந்தை Savio Barretto இப்புதனன்று UCAN செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.
UNESCO வின் உலகச் சின்னங்களில் ஒன்றெனக் கருதப்படும் இக்கோவில், Baroque கட்டிடக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறிய அருள்தந்தை Barretto, கோவிலில் உள்ள மின் இணைப்புக்களில் அடிக்கடி தீப்பொறிகள் உருவாகி வருவதையும், இதனால் இக்கோவில் தீவிபத்தைச் சந்திக்கும் ஆபத்தில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக அரசிடம் இது பற்றி எடுத்துரைத்தும், அரசு எவ்வித முயற்சியும் எடுக்காமல் இருக்கிறதென்றும், உலகச் சின்னங்களில் ஒன்றாகவும், புனித சேவியரின் உடல் வைக்கப்பட்டுள்ள புனிதத்தலமாகவும் உள்ள இக்கோவில் இந்நிலையில் இருப்பது பெரும் கவலையைத் தருகிறதென்றும் அதிபர் அருள்தந்தை Savio Barretto கூறினார்.ஒவ்வொரு நாளும் இப்புனிதத் தலத்தைக் காண 10000 மக்கள் வருகின்றனர் என்று UCAN செய்தி கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.