2011-05-11 16:54:16

உரோமையில் அகில உலக கத்தோலிக்கத் திரைப்பட விழா ஆரம்பம்


மே 11,2011. அகில உலக கத்தோலிக்கத் திரைப்பட விழாவொன்று இப்புதனன்று உரோமையில் துவக்கப்பட்டது. மேமாதம் 21 வரை நடைபெறும் இவ்விழாவில் சிறந்தத் திரைப்படம், சிறந்த ஆவணப் படம், சிறந்த நடிகர்கள், சிறந்த இயக்குனர்கள் ஆகியப் பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இயேசு தன் அரிய உண்மைகளை உவமைகள் வழியாக மக்கள் மனதில் பதித்தார்; அதேபோல், இன்றைய உலகின் ஆழமான உண்மைகளைக் கூற திரைப்படம் என்ற அருமையான கருவி நம்மிடம் உள்ளதென்று திருப்பீடத்தின் கலாச்சார பணிக் குழுவில் பணியாற்றும் அருள்திரு Franco Perazzolo இத்திரைப்பட விழாவைக் குறித்து இத்திங்களன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.
கிறிஸ்தவர்களாகிய நாம் உண்மை அழகைக் காணவும், அதைக் குறித்துப் பேசவும் இவ்விழா உதவியாக இருக்கும் என்று நம்புவதாக இவ்விழாவின் அமைப்பாளர்களில் ஒருவரான Alberto Di Giglio கூறினார்."உலகை மாற்றிய ஒன்பது நாட்கள்" (Nine Days that Changed the World) என்ற தலைப்பில் அருளாளர் இரண்டாம் ஜான்பால் குறித்தத் திரைப்படம், "இறைவனின் சக்தி வாய்ந்த பணியாளர்" (God's Mighty Servant) என்ற தலைப்பில் திருத்தந்தை 12ம் பத்திநாதருக்குப் பணிகள் செய்த அருள் சகோதரி Pascalinaவை மையப்படுத்தியத் திரைப்படம் உட்பட ஐந்து திரைப்படங்கள் "வெள்ளி மீன்" என்ற இவ்விழாவின் உயரிய விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.