2011-05-10 15:44:09

அயோத்தியின் பாபர் மசூதி குறித்த இந்திய உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளார் மனித உரிமைகள் அவை தலைவர்.


மே 10, 2011. அயோத்தியின் பாபர் மசூதி குறித்த வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு தற்காலிக தடை வழங்கியுள்ள இந்திய உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக அறிவித்துள்ளார் குஜராத் மனித உரிமைகள் அவையின் தலைவர் இயேசு சபை குரு செத்ரிக் பிரகாஷ்.
16ம் நூற்றாண்டு மசூதி இருக்கும் இடம் ராமர் பிறந்த இடம் என்பதை ஏற்று, அதனை இந்து மற்றும் இஸ்லாமிய குழுக்களிடையே மூன்றாகப் பிரிக்க 2010ம் ஆண்டு செப்டம்பர் 30ந்தேதி அலகாபாத் உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு செயல்படுத்தப்பட தடை வழங்கியுள்ள உச்ச நீதிமன்றத்தின் அண்மை தீர்ப்பை தலத்திருச்சபையுடன் இணைந்து பல மனித உரிமை குழுக்களும் வரவேற்றுள்ளன. அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆச்சரியம் தரும் ஒன்றாக உள்ளது என உச்சநீதி மன்ற நீதிபதிகள் கூறியுள்ளது சரியான ஒரு கூற்றே எனக் கூறினார் குரு பிரகாஷ்.
எது தவறு, எது நிரூபிக்க வல்ல உண்மை என்பதை விட, மக்களின் நம்பிக்கைக்கும் உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, மாநில உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதைப்போல் தெரிவதாக இயேசு சபை குரு மேலும் கூறினார்.
உச்ச நீதி மன்றத்தின் இறுதித்தீர்ப்பு, உண்மைக்கும் நீதிக்கும் சேவையாற்றும் ஒன்றாக இருக்கும் என்ற தன் நம்பிக்கையையும் வெளியிட்டார் குரு பிரகாஷ்.








All the contents on this site are copyrighted ©.