2011-05-09 15:59:30

வியட்நாமிலும் சீனாவிலும் கிறிஸ்தவர்களின் எதிர்ப்புப் போராட்டங்கள்


மே 09, 2011. வியட்நாமில் மத சுதந்திரமும் நிலச்சீர்திருத்தங்களும் வேண்டி கிறிஸ்தவர்கள் நடத்தி வரும் போராட்டங்களில் பலர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் உள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் காணாமற்போயும் உள்ளனர்.
லாவோஸ் நாட்டுடனான வியட்நாம் எல்லைப்பகுதியில் கிறிஸ்தவர்கள் உரிமைகள் கேட்டு நடத்திய போராட்டத்தின்போது வியட்நாம் மற்றும் லாவோஸ் பாதுகாப்புத் துருப்புகள் கடந்த செவ்வாயன்று நடத்தியத் தாக்குதலில் 17 கிறிஸ்தவர்கள் உயிரிழந்தனர், 33 பேர் காயமடைந்தனர்.அரசால் கைப்பற்றப்பட்ட தங்கள் சொந்த நிலங்களைக்கேட்டுப் போராடி வரும் கிறிஸ்தவர்கள் மீது வியட்நாம் அரசுத் துருப்புக்கள் நடத்தும் தாக்குதலில் இதுவரை 39 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அப்பகுதி கிறிஸ்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, கடந்த ஐந்து வாரங்களாக சீனாவில் கிறிஸ்தவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே இடம்பெற்றுவரும் மோதல்கள் தொடர்பாக இஞ்ஞாயிறன்று 15 கிறிஸ்தவர்களைக் கைது செய்துள்ளது அந்நாட்டு காவல்துறை.
சௌவாங் கிறிஸ்தவச் சமூகம் அப்பகுதி பூங்கா ஒன்றில் செப வழிபாடு ஒன்றை நடத்த முயன்றபோது இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.
தங்களுக்கு வழிபாட்டு உரிமையும், வழிபாட்டுத் தலங்களும் வேண்டும் என போராடி வரும் சில சீனக் கிறிஸ்தவக் குழுக்களின் அங்கத்தினர்கள் 264 பேர் கடந்த நான்கு வாரங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.








All the contents on this site are copyrighted ©.